விநாயகர் சதுர்த்திக்கு முதல் நாளே பச்சரிசி இட்லி, கொழுக்கட்டைக்கு, மாவு, பூரணம், எள் சிகிலி உருண்டை எல்லாம் தயார் செய்து வைக்கவும். பிள்ளையார் சதுர்த்தியன்று வாசலில் செம்மண் இட்டு மணைக் கோலம் போட வேண்டும். பூஜையறையில் பலகையில் கோலம் போட வேண்டும். பூஜையறையில், பலகையில் கோலம் போட்டு புது மண் பிள்ளையார் வாங்கி வந்து வைத்து அலங்காரம் செய்து எருக்கமாலை, மாவிலை, தும்பை, அரளி, அருகம்புல், மல்லிகை, ரோஜா, தாமரை எல்லா மலர்களும் கொண்டு பூஜை செய்ய வேண்டும். எல்லா பழ தினசுகளும் வைக்கலாம். சோளக்கதிர் விளாம்பழம் பிள்ளையாருக்குப் பிடிக்கும். காலையில் மாவைக் கிளறி, கொழுக்கட்டை மோதகம், உருண்டைப் பாயசம், வடை, சுண்டல், சாதம் பருப்பு, பச்சரிசி இட்லி, எல்லாம் மடியாகச் செய்ய வேண்டும். தேங்காய் உடைத்து, வெற்றிலை பாக்கு நைவேத்யம் செய்ய வேண்டும். பிறகு ஆரத்தி எடுத்து விநாயகர் ஸ்லோகங்களைச் சொல்லி, பாட்டுக்கள் பாடி முடிக்க வேண்டும். சாயந்திரம் சுண்டல் செய்து எல்லாரையும் கூப்பிட்டு மஞ்சள் குங்குமம், கொடுத்து, சுண்டல் விநியோகம் செய்யலாம்.
அடுத்த நாள் மத்தியானம் பிள்ளையாருக்கு தயிர் சாதம் செய்து, ஒரு துணியில் கட்டி தோள்பட்டையில் தொங்க விட்டு நகையெல்லாம் கழற்றி விட்டு மண்பிள்ளையாரை ஆற்றிலோ, குளத்திலோ கரைத்து விட வேண்டும்.