Tuesday, July 5, 2011

வரலெக்ஷ்மி அம்மன் பாட்டு

சித்தி வினாயகரே, சிவனுடைய குமாரரே
பக்தியினால் உனை வேண்டி பிரார்த்தனை செய்து பாடுகிறேன்.
விக்கினங்கள் இல்லாது வேண்டியே சரஸ்வதியை
சரணம் பண்ணி தியானம் பண்ணி சம்ப்ரதாயமாய் தமிழ் பாடவே.
மகாலட்மியை த்யானம் பண்ணி மகிமைதனைப் பாடவே.

க்ஷீராப்தியில் பிறந்தவள் ;
சிருங்கார ஆனந்த ரூபமவள்;
கமல ஸ்தலத்தில் உதித்தவள்;
அனைவருக்கும் தேவியவள்
மகாவிஷ்ணு மார்பில் அணிந்தவள்
மங்களமாய் வராள் பாருங்கோடி....

குண்டிலம் என்கிற பட்டினம் தனில் கூர்மொழியாள் சாருமதி
பக்தி சிரத்தையுடனே கூட பர்த்தாவை பூஜை செய்யறவள் சாருமதி
அனுஷ்டானங்களை நீதியுடனே முடிக்கிறவள்.
அந்தப்புறம் தனில் சயனித்திருக்கும் அர்த்தராத்திரி வேளையிலே
அம்மனும் வந்து தட்டி எழுப்பினாள்.
அதிசயத்துடன் சாருமதியும் எழுந்தாள்.
தங்கக் கடகம் கலகலவென சுருட்டிக் கொண்டு
எழுந்திருந்து சுற்றி பிரதக்ஷிண நமஸ்காரம் செய்து,
‘யாரம்மா நீ?’ என்று கேட்க,
அப்போது சொன்னாள் அம்மனவள்
‘வரலட்சுமி நான் வந்தேன்’ என்றாள்.
வகைவகையாய் பூஜை பண்ணு என்றாள்
எவ்வித பூஜை செய்வது? என்று எடுத்துக் கேட்டாள் கனவிலே
ஸ்ராவண மாதம் சுக்ல பக்ஷம் பூர்ணசுக்ரவாரந்தன்னில்
சாயங்காலம் ஸ்நானம் பண்ணி
சர்வாபரண பூஷிதையாய் பூரண கலசம் வைக்கச் சொன்னாள்
அம்மனும் பூஜைகளையும் செய்யச் சொன்னாள்.
இட்லி கொழுக்கட்டை, மோதக பட்சணம், பாயசமும் நைவேத்யம் வைக்கச் சொன்னாள்

அம்மனும் அந்தர்தியானம் ஆனாள்.
அப்போ முழித்தாள் சாருமதி
மஞ்சத்தின் மேலே இருந்து கொண்டு மகிழந்து கொண்டு, சிரித்து கொண்டு, பந்து ஜனங்களை வைத்துக் கொண்டு வேடிக்கையாக சொல்லலுற்றாள்.
‘கேளுங்கோடி தோழி, கேளுங்கோடி! கண்ட கனவையும் கேளுங்கோடி!
அம்மனும் வந்து தட்டி எழுப்பின அதிசயத்தையும் கேளுங்கோடி!
பூஜாக்ரமங்களைச் சொன்னவுடன் பூரித்து சந்தோசமானவுடன், ஸ்ராவண மாசம் எப்போ வரும் என்று சந்தோசமாகவே காத்திருந்தாள்.

அப்போ வந்ததே ஸ்ராவண மாசம், அத்தனை பேருமாய்க் கூடிக் கொண்டு, அரண்மனைகள், அந்தப்புரங்கள், அலங்காரங்கள் செய்தனராம். மாளிகை தோறும் மாக்கோலம் போட்டு மகரத் தோரணம் கட்டினாளாம். அந்த குருவாரந்தன்னில் அத்தனை பேருமாய் கூடிக் கொண்டு திவ்யமான பஞ்சபக்ஷ பாயசங்கள் சமைத்தனராம். அத்தனை பேருமாய்க் கூடிக் கொண்டு அவர்கள் மாணிக்கக் கிண்டியை கையில் எடுத்துக் கொண்டு மகிழ்ந்து கொண்டு, சிரித்துக் கொண்டு, நதிகளிலே ஸ்நானம் பண்ணிக் கொண்டு, நல்ல வஸ்திரம் தரித்துக் கொண்டு திவ்யமான பட்டு பட்டாடைகள் ஆபரணங்கள் பூட்டிக் கொண்டு, அந்தச் சுக்ர வாரந்தன்னில் அந்த அம்மனை அழைக்க வேண்டும் என்று, தலைவாசல் கிரகந்தன்னில் சந்தோஷமாகவே அம்மனை வைத்தாளாம்.
பாலவல்லி பந்தலிலே பக்தியுடன் பூஜை பண்ணினாளாம். தாழம்பூவாம், தாமரைப்பூவாம், தாயாருக்குச் சூட்டினாளாம். தாளங்களாம், மேளங்களாம், மிகுதியான வாத்யங்களாம், ஐந்து வகை சாதங்களாம், அனேக கோடி பழ வகையாம், இட்லி மோதக பக்ஷணவகைகள், பாயாசம் நைவேத்யம் பண்ணினாளாம்.

பஞ்ச ஹாரத்தி, கற்பூர ஹாரத்தி, பக்தியுடன் தான் எடுத்தாளாம். துலங்கும் மணிமண்டபத்தில் பக்தர், குஞ்சு, குழந்தைகளைப் பார்க்க வந்த பிராமணர்க்கெல்லாம், அத்தனை பேருக்கும் அட்சதை போட்டு, அழகாக வாயன தானம் கொடுத்தாளாம். உன்னாலே சாருமதி இத்தனை பாக்கியம் அடைந்தோம், வீட்டுக்குப் போய் வரோம் என்றவர்கள் விடை பெற்றுச் சென்றார்கள்.

யானை குதிரையெல்லாம் வீடு தோறும் கட்டி இருக்காம், அடையாளங்கள் தெரியாமலே ஆச்சரியப்பட்டுப் போனார்களாம். அஷ்டலட்சுமி வாசம் செய்வாள். அன்னபூரணி துணை இருப்பாள், பரம சிவன் சொன்ன வார்த்தை கேட்டு பார்வதி மகிழ்ந்திருந்தாள். வரலட்சுமி விரதம் செய்த பேருக்கு வத்தாமல் பால் பசுவும், சந்தான சம்பத்துகளும், சகல பாக்யமும் தான் தருவாள். அன்புடனே பார்பவர்க்கும், இன்பமுடன் கேட்பவர்க்கும் வாழி வாழி என்று வரமளித்தார் ஈசுவரனார்.

வரலெக்ஷ்மி அம்மன் பூஜை

வ‌ரலட்சுமி அம்ம‍ன் பண்டிகை, ஒவ்வொரு வருடமும், ஆடி கடைசி வெள்ளிக்கிழமை அல்ல‍து, ஆவணி மாதம் முதல் வார வெள்ளிக்கிழமையிலோ வரும். கல்யாணமான வருடம், ஆடியில் பண்டிகை வந்தாலும், பூஜை எடுத்து வைப்பார்கள். முதல் வருடம் பண்டிகை எடுத்து வைக்க‍வில்லை என்றால் ஆவணி மாதம் வரும் வெள்ளிக்கிழமையன்று வரும் பண்டிகையில் தான் பூஜை எடுத்து வைக்க‍ வேண்டும். பூஜை எல்லாரும் செய்து விட முடியாது. மாமியார் வீட்டில் செய்யும் பழக்க‍ம் இருந்தால் தான் அந்தப் பெண் பூஜை செய்ய‍ முடியும்.

பண்டிகைக்கு ஒரு வாரம் முன்ன‍ ரே வீட்டை ஒட்டடை அடித்து, சுத்த‍ம் செய்து, சுவாமி அறையைச் சுத்த‍ம் செய்து, சுண்ணாம்பு அடிக்க‍ வேண்டும். பிறகு பூஜை அறையில் அம்ம‍ன் முகத்தை வரைந்து, மண்டபம் வரைய வேண்டும். இரண்டு பக்க‍மும் வாழை மரம் வரைய வேண்டும்.

இரண்டு நாட்களுக்கு முன்னரே கலசத்தைத் தயார் செய்ய வேண்டும். ஒரு கலசத்தில் (தாமிர சொம்பு அல்லது வெள்ளிச் சொம்பு) சாஸ்திரத்துக்காக சுண்டாம்பு தடவி சொம்பில் அம்மன் முகம் வரைய வேண்டும். கொட்டாங்குச்சியை நெருப்பில் சுட்டு அணைத்து அந்தக் கரியைச் சுத்தமான இடத்தில் சிறிது நீர் ஊற்றி மை போல கருப்பாக வரும். அதில் ஒரு பிரஷ் அல்லது ஈர்க்குச்சியைக் கொண்டு அதில் தொட்டு அம்மன் முகம் வரைந்து காய வைக்க வேண்டும். நன்றாக காய்ந்ததும் சொம்பின் கழுத்தில் கருகமணி, காதோலை, நகைகள் போட்டு அலங்காரம் செய்ய வேண்டும். பின்னர் சொம்பில் 1¼ டம்ளர் பச்சரிசி, 2 டீஸ்பூன் துவரம்பருப்பு, 1 அச்சு வெல்லம், 1 எலுமிச்சம் பழம், 2 வெத்தலை பாக்கு, 2 திராட்சை, 2 பேரிச்சம்பழம், 2 மஞ்சள்கிழங்கு, 1ரூபாய் நாணயம் போட்டு நிரப்ப வேண்டும். பின் நல்ல முற்றின தேங்காயை மஞ்சள் தடவி சந்தன குங்குமம் இட்டு சொம்பின் மேல் வைக்கவும். மாவிலை ஒரு கொத்து, தாழம்பூ 2 மடல் செருக வேண்டும். தேங்காயின் உச்சியில் அம்மன் முகத்தைச் செருகி நூலால் கட்டி விடவும். கலசம் தயார். ஒரு தட்டில் பச்சரிசி நிரப்பி கலசத்தை அதில் வைத்து விடவும். கலசத்திற்கு 7,9,11, ஒற்றைப்படை எண்களில் மாவிலை செருக வேண்டும்

பூஜை அறையைச் சுத்தம் செய்து ஒரு மர ஸ்டூல் வைத்து நடுவில் பலகை வைத்து நாலுபக்கம் அல்லது, 2பக்கம் வாழைக் கன்றைக் கட்டவும். மாக்கோலத்தால் வீடெங்கும் கோலம் போட வேண்டும். அம்மனுக்குப் பஞ்சினால் வஸ்திரம் செய்து போட வேண்டும். புது ரவிக்கைத் துணி சொம்பின் பின்புறமாக அம்மனுக்குச் சுற்றிவிடவும். எல்லாவித பழங்களும், வெற்றிலை, பாக்கு, சந்தனம், குங்குமம், விதவிதமான பூக்கள் சேகரித்துப் பூஜைக்குத் தயார் செய்ய வேண்டும்.

வரலட்சுமி பண்டிகை அன்று எண்ணெய் தேய்த்துக் குளித்து, தலையை உலர்த்திப் பின்னி பூ வைத்துக் கொண்டு, 9 கஜம் கட்டிக் கொண்டு விளக்கேற்றி வைக்கவும். வாசல்படியில் முன்புறம் சிறிய கோலம் போட்டு அம்மனை தட்டுடன் அங்கு வைத்து பூ, அட்சதை போட்டு, நமஸ்காரம் செய்து கற்பூரம் பத்தி காண்பித்து வெற்றிலை, பாக்கு, பழம் நைவேத்தியம் செய்து அம்மனை மெதுவாக எடுத்துக் கொண்டு ‘பாக்யாப்த லெக்ஷ்மி பாரம்மா’ என்று பாடிக் கொண்டு பூஜை அறையில் மண்டபத்தில் பலகையின் மீது வைத்து அம்மனை மலர்களால் அலங்காரம் செய்யவும்.

முதல்நாளே, பச்சரிசி இட்லிக்கு 1 டம்ளர் பச்சரிசி, ¼ டம்ளர் உளுந்து ஊற வைத்து உப்பு போட்டு கரைக்கவும். கொழுக்கட்டை மாவை மிக்ஸியில் 4 நாளைக்கு முன்பாகவே அரைத்து சலித்து காய வைத்து தயார் செய்யவும்.

பாயசம் : கொழுக்கட்டை மாவை மெலிதாக திரித்து சின்னச் சின்ன உருண்டையாக உருட்டிக் கொதிக்கும் நீரில் போட்டு வெந்ததும், வல்லம் போட்டு, பால் விட்டு, ஏலக்காய்ப் பொடு போட்டு செய்யவும்.

வடைக்கு ½ டம்ளர் கடலைப்பருப்பு, ¼ டம்ளர் துவரம்பருப்பு, ¼ டம்ளர் உளுந்து, பச்சைமிளகாய், உப்பு, பெருங்காயம் போட்டு, மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். 10 வடை நைவேத்யத்துக்கு தட்டி வைத்துக் கொண்டு, மீதி மாவைப் பச்சையாக கொழுக்கட்டைக்கு வைத்து உப்பு கொழுக்கட்டை செய்யவும்.

இனிப்புக் கொழுக்கட்டை : 1 மூடி தேங்காயைத் துருவி, வாணலியில் வதக்கி, தூள் வெல்லம் போட்டு, 1 ஸ்பூன் நெய் ஊற்றி வதக்கவும். ஏலக்காய் போடி போட்டு பூரணம் தயாராகிவிடும்.

எள்ளுக் கொழுக்கட்டை: கருப்பு எள்ளை ஊற வைத்து, அலம்பி வடிகட்டி, நன்றாக தேய்த்து விட்டு வாணலியில் போட்டு வெடிக்க விட வேண்டும். சிவந்ததும் எடுத்து ஆறியபின் புடைத்து விட்டு வெல்லம் சேர்த்து மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும். எள்ளுப் பூரணம் ரெடியாகிவிட்டது.

கொழுக்கட்டை மாவு தயாரானவுடன் தேங்காய் பூரணம், வடைமாவு, எள்ளுப் பொடி போட்டு, மூடி கொழுக்கட்டை செய்யவும்

சாதம் 1 டம்ளர், சிறிது பருப்பு வேக வைத்து, உப்பு போட்டு சுவாமிக்கு மகா நைவேத்தியம் தயார் செய்யவும்.

பூஜை செய்வதற்கு முன் நைவேத்யங்களை தயார் செய்து வைத்துக் கொண்டு பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.

மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும். நோம்பு சரடு இரண்டு அல்லது நான்கு எடுத்து, பூ கட்டி, ஸ்வாமி பாதத்தில் வைக்கவும். புத்தகத்தில் உள்ளபடி பூஜை செய்து, ஆரத்தி எடுத்து, பூஜையை முடிக்கவேண்டும். சுமங்கலிகளுக்கு தாம்பூல் வைத்து கொடுக்கவும். பூஜை முடித்து கணவரிடம் சரடு கொடுத்த கையில் கட்டிக் கொண்டு நமஸ்காரம் செய்யவேண்டும்.

சாயந்திரம் விளக்கேற்றி, கடலைப்பருப்பு சுண்டல் நிவேத்யம் செய்து, அம்மன் கதை படித்து, மங்களம் பாடி கற்பூரம் ஏற்றி சுமங்கலிகளுக்குத் தாம்பூலம் கொடுக்கவும்.

மறுநாள் காலை குளித்துவிட்டு விளக்கேற்றி வெற்றிலை தேங்காய் பழம் வைத்து நைவேத்தியம் செய்து புனர்பூஜை செய்யவும் (லக்ஷ்மி அஷ்டோத்திரம் படித்து) அம்மனை வடக்குப் பக்கம் நகர்த்தி வைத்து அன்று இரவு கற்பூரம் ஏற்றி நமஸ்காரம் செய்து, இதே போல் அடுத்த வருடமும் நீ நிறைந்து எங்கள் வீட்டுக்கு வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு நமஸ்காரம் செய்து அம்மனை மெதுவாக கலசத்துடன் எடுத்து அரிசி உள்ள பாத்திரத்தில் வைத்து விடவும். பக்கத்தில் ஒரு விளக்கை வைக்கவும்.

பிறகு அடுத்த நாள் காலை அம்மனை எடுத்து பத்திரமாக துடைத்து அம்மன் மேல் உள்ள நகைகளை சிறிது நேரம் கழுத்தில் போட்டுக் கொண்டு கலசத்தில் உள்ள அரிசியை எடுத்து அடுத்த வெள்ளிக்கிழமை சக்கரை பொங்கல் செய்து சாப்பிடவும். அதில் உள்ள எலுமிச்சம்பழத்தை சக்கரை போட்டு ஜூஸ் சாப்பிடவும்.

பூஜை செய்த பூவை எல்லாம் எடுத்து கால் படாத இடத்தில் கொட்டி விடவும். - அல்லது நீரில் போட்டுவிடலாம்.

இத்துடன் வரலட்சமி அம்மன் பூஜை நிறைவுற்றது.

பதினெட்டாம் பெருக்கு

ஆடிப் பதினெட்டு அன்று காவேரி அம்ம‍னுக்கு மிகவும் பிடித்த‍மான தினம். ஆடி மாதம், ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும். காவேரி அம்ம‍னுக்கு, பூஜை செய்ய‍ வேண்டும். வீட்டிலிருந்து தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, பழவகைகள், காதோலை, கருகமணி, முளைப்பாரி, வெல்லம் எடுத்துக் கொண்டு, காவிரி ஆற்றிற்குச் சென்று, அங்கு மணலை எடுத்து, கரையில் பிள்ளையார் போல மண்ணைக் குவித்து, மஞ்சள் குங்குமம் பூ எல்லாம் வைத்து, தூப தீபம் காண்பித்து, தேங்காய், பழம் வைத்து, நைவேத்தியம் செய்து, காவேரி அம்ம‍ னை, வழிபட்டு, வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி, ஆற்றில் விட வேண்டும். ஒரு சொம்பில் ஆற்று நீரை எடுத்துக் கொண்டு, வீட்டில், பூஜை அறையில் வைக்க‍ வேண்டும்.

அன்று, காவேரி அம்ம‍னுக்கு வளைகாப்பு என்பார்கள். அதனால், வீட்டில், கலந்த சாத வகைகள் செய்து சாப்பிடுவார்கள். கிராமங்களில், மாலையில் ஆற்றுக்குச் சென்று, சித்ரான்ன‍ங்களை வைத்துச் சாப்பிடுவார்கள். வெளியூரில் உள்ள‍வர்கள், வீட்டில், காவேரி அம்ம‍ னை பூஜை செய்து, கொண்டாடலாம்.

Wednesday, June 15, 2011

ஆடி மாதம்

ஆடி மாதம் என்றாலே பண்டிகைகள் வரிசையாக வந்து விடும். ஆடி ஒன்றாம் தேதி, ஆடிப்பண்டிகை. அன்று வாசலில் அன்று வாசலில் மாக்கோலம் போட்டுச் செம்ம‍ண் இட வேண்டும். அன்று சமையலில், இனிப்புப் போளி செய்வார்கள்.(முடியாவிட்டால் ஏதாவது பாயசம் செய்ய‍லாம்).

வடை, பாயசம் எல்லாம் செய்து சாப்பிடுவார்கள். அன்று மாலை, இளம் தேங்காயை வாங்கி வந்து, மேலே உள்ள .தேங்காய் நாரை எடுத்துவிட்டு, வழுவழுப்பாகச் செய்து, ஒரு கண்ணைப் பொத்து, அதில் உள்ள‍ இளநீரை எடுத்து வைத்து, தேங்காய்க்குள், வறுத்த‍ அவல், பாசிப்பருப்பு, வெல்ல‍ம், எள் எல்லாவற்றையும் பொடி செய்து அதில் நிறைய திணித்து எடுத்து வைத்த‍ இளநீரை அதில் ஊற்றி, வாதநாவல் குச்சியை சீவி, அதை அடைப்பார்கள். அதற்கு மஞ்சள் குங்குமம் தடவி, இளம் தணலில், ஓலையை வைத்துச் சுடுவார்கள். அப்படிச் சுடும்போது, உள்ளே இருக்கும், பூரணம் வெந்து தேங்காய் ஒரு வெடிக்கும், அதை அப்ப‍டியே எடுத்து சுவாமி முன்வைத்துப் படைப்பார்கள். திருஷ்டி கழித்து என்பார்கள். அதை மெதுவாக எடுத்து ஓட்டைப் பிரித்து, உள்ளே இருக்கும். பூரணத்தைத் தேங்காயோடு கட்பண்ணி எல்லாருக்கும் கொடுத்துச் சாப்பிடுவார்கள். தேங்காய் சூடும் பண்டிகை, என்பார்கள் இன்றும் கிராமங்களில் இதை விடாமல் செய்து வருகிறார்கள்.

ஆடிமாதம் வரும் 4 வெள்ளிக்கிழமைகளில் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை வீட்டில் நாமகிரி அம்மனுக்கு மாவிளக்குப் போட்டு, புற்றுக்கும் சென்று மாவிளக்குப் போட்டு, மாரியம்ம‍னுக்கும் மாவடியனுக்கும் பால் வாங்கிக் கொடுத்து விட்டு வருவது வழக்க‍மாக உள்ள‍து. வெளியூரில் உள்ள‍வர்கள் வெள்ளிக் கிழமை அன்று அம்ம‍ னை நினைத்து வீட்டில் மாவிளக்குப் போடலாம்.

மாரியம்ம‍ன் பண்டிகை

வைகாசி மாதம், கரூரில் மாரியம்ம‍ன் பண்டிகை மிகவும் பிரசித்த‍ம். அம்ம‍னுக்கு முதல் காப்பு கட்டியதிலிருந்தே, கம்பத்திற்குத் தண்ணீர் ஊற்ற‍ ஆரம்பித்து விடுவார்கள். மாரியம்ம‍னுக்கு ஒரு வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் நடைபெறும்.

அன்று கோயிலுக்குச் சென்று பால் வாங்கிக் கொண்டு போய் கொடுத்துவிட்டு மணமுள்ள‍ பூக்க‍ ளை வாங்கிக் கொண்டு போய்க் கொடுத்து நமஸ்காரம் செய்து விட்டு வரவேண்டும்.

இரண்டாம் காப்பு கட்டியபிறகு, திருவிழா (அக்னி சட்டி, அலகு குத்தி எடுப்பார்கள்) மூன்று நாட்கள் பால்குடம் நடக்கும். பண்டிகை நாட்களில் ஒரு வெள்ளிக்கிழமை மாரியம்ம‍னுக்கு வீட்டில் மாவிளக்குப் போட வேண்டும். ஒரு சொம்பில் நிறைய நீர் ஊற்றி, அதில் மஞ்சள் பொடி, விபூதி, குங்குமம் போட்டு, வேப்ப‍ந்தழை நிறைய வைத்து ஒரு குழவிக்க‍ல்லை அதில் செருகி அதற்கு கண்மலர் வைத்து விபூதி இட்டு மஞ்சள் பூசி, சந்தனம் குங்குமம் இட்டு, மாலைகள் போட்டு, ஒரு இரவிக்கைத் துணியை சொம்பிற்குப் பாவாடையாகக் கட்டி, அம்ம‍னுக்கு, நகைகள் போட்டு, அலங்காரம் செய்ய‍ வேண்டும்.

அன்று விரதம் இருந்து, சமைத்து, பாயசம் வைத்து, சுவாமிக்கு (சாதம், பருப்பு, பாயசம் ) மாவிளக்கு போட்டு இரண்டு தேங்காய், வெற்றிலை பாக்கு, பழம, நீர்மோர், பானகம் வைத்து, மாரியம்மனை வேண்டிக் கொண்டு பூஜை செய்ய‍ வேண்டும். தீபாராதனை செய்து, தேங்காய் பழம் உடைத்து, ஆரத்தி எடுத்து, முடிவு செய்ய‍ வேண்டும். அடுத்த‍ நாள் காலை குளித்து விட்டு, சுவாமிக்கு கற்பூரம் காட்டி, எடுத்து வைத்துவிட்டு, அந்தச் சொம்பில் உள்ள‍ நீரை மாரியம்மன் கோயிலில் உள்ள‍ கம்பத்த‍டியான் மீது ஊற்ற‍ வேண்டும். இந்த 15 நாள் பண்டிகையில், நம்மால் முடிந்த அளவுக்கு - மூன்று நாளோ, ஒரு நாளோ - கோவிலுக்குச் சென்று மாரியம்ம‍ன், கம்பத்த‍டியானுக்கு, தண்ணீர் ஊற்றி வேண்டிக் கொண்டு வர வேண்டும்.

Thursday, April 14, 2011

புது வருடப் பிறப்பு - விஷு

சித்திரை ஒன்றாம் தேதி, விஷு (புது வருடப் பிறப்பு) கனி காணுதல் என்னும் பண்டிகை யாகும். முதல்நாளே வீட்ட‍ச் சுத்த‍ம் செய்து, கோலம் போட்டு, செம்ம‍ண் இட வேண்டும். சுவாமி அறையைத் துடைத்து விட்டு கோலம் போட்டு, எல்லா படஙகளையும் துடைத்து, சந்தனம், குங்குமம் இட்டு, முகம் பார்க்கும் கண்ணாடியை ஒரு கோலம் போட்ட‍ பலகையின் மீது வைத்து, சந்தனம், குங்குமம் இட வேண்டும்.

கண்ணாடிக்கு முன்னால், சின்ன‍ச் சின்ன‍க் கிண்ண‍ங்களில் அரிசி, பருப்பு, உப்பு, மஞ்சள் பொடி, குங்குமம் வைக்க‍ வேண்டும். கண்ணாடிக்கு நகைகளைப் போட்டு அலங்காரம் செய்ய‍ வேண்டும். ஒருபெட்டியில் எல்லா நகைகளையும் வைத்து வெத்த‍ லை பாக்கு, எல்லாவித பழங்கள் முக்கியமாக (மா, பலா, வாழை), தேங்காய், புதுத் துணி எல்லாவற்றையும் வைத்து அலங்காரம் செய்ய‍ வேண்டும்.

மறுநாள் விடியற்காலையில் எல்லாரும் எழுந்திருப்ப‍து முன்னால் எழுந்து பல் தேய்த்து முகம் கழுவி, பொட்டு இட்டுக் கொண்டு, ஆண்டவனை, இந்த வருடம் முழுவதும் நல்ல‍ வருடமாக எல்லாருக்கும் அமைய வேண்டும். எல்லாரும் சுகமாக நன்றாக இருக்க வேண்டும், என்று மனதில் பிரார்த்தித்துக் கொண்டு விளக்கேற்றி எல்லா மங்கலப் பொருட்களையும் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டு, பிறகு, வீட்டில் உள்ள‍வர்களை எழுப்பி கண்ணை மூடிக் கொண்டு வந்து சுவாமி அறையின் முன் வந்து, சுவாமியைப் பார்க்க‍ சொல்ல‍ வேண்டும். பிறகு, கண்ணாடியில் அதற்குமுன் உள்ள‍ மங்கலப் பொருட்களைப் பார்த்து, கண்ணில் தொட்டு ஒற்றிக் கொண்டு நமஸ்காரம் செய்ய‍ சொல்ல‍ வேண்டும்.

பிறகு எப்போதும் போல் அன்றாட வேலைகளைச் செய்து கொள்ள‍லாம். அன்று எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்க‍ள் சொல்ல‍ வேண்டும். பெரியவர்களுக்கு நமஸ்காரம் செய்து ஆசிர்வாதம் வாங்கிக் கொள்ள‍ வேண்டும்.

பக்க‍த்தில் உள்ள‍ கோயில்களுக்குச் சென்று வரலாம். அன்று சமையலில் வேப்ப‍ம்பூ கட்டாயம் சேர்க்க‍ வேண்டும். பாயசம், மாம்பழம், வேப்ப‍ம்பூ போட்டு புளிப்பச்ச‍டி அவசியம்.

Tuesday, April 5, 2011

ஸ்ரீ ராம நவமி

பெரும்பாலும் பங்குனி மாதக் கடைசியில் வரும். சில சமயங்களில் சித்திரை முதல் வாரம் கொண்டாடுவார்கள். ஸ்ரீ ராம நவமி, பங்குனி மாதம், புனர்பூசம் நட்சத்திரத்தில் வருகிறது. அன்று ராமர் புண்ணிய பாரதத்தில் உதித்த‍ நன்னாளாகும்.

அன்று வாசலில் செம்ம‍ண் இட்டு கோலம் போட வேண்டும். குளித்து விட்டு விளக்கேற்றி இராமர் பட்டாபிஷேகப் படத்தை, ஒரு கோலம் போட்ட‍ பலகையின் மீது வைத்து ராமருக்குச் சந்தன குங்குமம் இட்டு, பூமாலைகள் போட்டு, பஞ்சு வஸ்த்ரம் சாத்தி, ராம நாமாவளிகளைச் சொல்லி பூஜை செய்ய‍ வேண்டும். (கிரமமாக செய்ய‍ வேண்டுமென்றால், ராமர் அஷ்டோத்திரம் படித்து பூஜை செய்ய‍லாம்)


ராமருக்குப் பிடித்த‍மான பாயசம், கோசம்பரி, நீர்மோர், பானகம், தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு வைத்து நைவேத்தியம் செய்ய‍ வேண்டும். பத்து நாளும், ராமர் படத்தை வைத்து பூஜை செய்து, தினமும் ராமர் பற்றிய பாட்டுகளை ஸ்லோகங்களைச் சொல்லி இரண்டு வேளையும் ஆரத்தி எடுத்து பத்து நாள் முடிக்க‍ வேண்டும். அக்க‍ம் பக்க‍ம் உள்ள‍வர்களை, தெரிந்தவர்களைக் கூப்பிட்டுத் தாம்பூலம் கொடுத்து, நீர்மோர், பானகம், சுண்டல், கோசம்பரி வினியோகம் செய்ய‍ வேண்டும்.

Friday, February 25, 2011

காரடையான் நோன்பு

மாசி மாத கடைசி தேதியும் பங்குனி ஒன்றாம் தேதியும் சேர்ந்து வரும் நாளில் காரடையான் நோன்பு வரும். மாசி மாதம் இருக்கும் போதே பூஜை செய்து சரடு கட்டிக் கொள்ள‍ வேண்டும். பங்குனி மாதம் எப்போது வேண்டுமானாலும் மாதம் பிறக்கும் ராத்திரி, பகல், எந்த நேரமானாலும் அப்போது தான் காரடையான் நோன்பு செய்ய‍ வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு முன்ன‍ ரே குளித்துவிட்டு நைவேத்தியத்தைச் செய்ய‍ வேண்டும்.

நான்கு மணி நேரத்துக்கு முன்ன‍ர், கடலைப் பருப்பு, தட்டைப்பயறு தனித்தனியாக ஊற வைத்து, குளித்துவிட்டு வந்து வேகவிடவும். உப்புக் கொழுக்க‍ட்டைக்கு கடலைப்பருப்பு, இனிப்புக் கொழுக்க‍ட்டைக்கு தட்டைப் பயறு போட வேண்டும். ஏற்கனவே கொழுக்க‍ட்டை செய்யும் முறை சொல்லி இருப்ப‍தைப் பார்த்து செய்ய‍வும். வெண்ணை வாங்கி வைத்துக் கொள்ள‍வும்.

நோன்புச் சரடு ஒரு வாரம் முன்ன‍ ரே வாங்கி வைத்து விடவும். காலையில் குளித்ததும், சரடுக்கு பச்சை மஞ்சள் குறுக்காக ரவுண்டாக நறுக்கி ஊசியால் ஓட்டை போட்டு, சரடை நுழைத்து மத்தியில் கட்ட‍ வேண்டும். அதனுடன், மல்லிகை, மரிக்கொழுந்து, அரளி வைத்துக் கட்ட‍லாம். தேங்காய்ப் பழம் வெத்த‍ லை பாக்கு வைத்து நைவேத்தியம் செய்ய‍ வேண்டும். இரண்டு நுனி இலை போட்டு ஸ்வாமிமுன் மாக்கோலம் போட்டு (வாசலிலும் போட வேண்டும்), இலையை அதன் மேல் போட்டு நைவேத்யமாக உப்பு கொழுக்க‍ட்டை, வெல்லக் கொழுக்க‍ட்டை, வெண்ணெய் வைக்க‍ வேண்டும்.

காமாட்சி அம்ம‍னுக்கு பூசை செய்து,

ஓரடையும் தட்டி வைத்து
உருகாத வெண்ணை வைத்து
நோன்பு நோற்றேன்
ஒருக்காலும் என்கணவர்
எனைவிட்டுப் பிரியாதிருக்க‍ வேண்டும் தாயே!

என்று சொல்லி நமஸ்காரம் செய்ய‍ வேண்டும்.

ச‌ரடுக்குப் பூசை செய்து, கணவர் கையால் கழுத்தில் கட்டிவிடச் சொல்ல‍வும். அவருக்கு நமஸ்காரம் செய்ய‍வும்.

மங்களே மங்களதாரே
மாங்கல்யே மங்கலப்ரதே
மங்களார்த்த‍ம் மங்களேசி
மாங்கல்யம் தேஹிமே சதா!'

என்று சொல்ல‍ வேண்டும். தினமுமே இதை நமஸ்காரம் செய்யும் போது இரண்டு வேளையும் சொல்லலாம்

பிறகு சுவாமி முன் போட்ட‍ இலையில் உட்கார்ந்து, ஒவ்வொரு அடை எடுத்து சாப்பிட்டுவிட்டு மீதியைக் கணவரைச் சாப்பிடச் சொல்ல‍ வேண்டும். அன்று ஒரு நாள் மட்டும் மனைவி சாப்பிட்ட‍ பிறகு கணவர் சாப்பிடுவது என்று வழக்க‍த்தில் உள்ள‍து.

தினமுமே காலையில் கணவர் பாதங்களைத் தொட்டு நமஸ்காரம் செய்து விட்டு திருமாங்கல்யத்தைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு தான் எழுந்திருக்க‍ வேண்டும். காலையில் பூஜை முடிந்த பிறகு கணவருக்கு நமஸ்காரம் செய்து ஆசிர்வாதம் செய்ய‍ சொல்ல‍ வேண்டும். வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்களுக்கும் செய்யலாம்!

Thursday, February 17, 2011

சிவராத்திரி

மாசி மாதம் சிவராத்திரி வரும். சிவனுக்கு அன்று புட்டு, சக்க‍ ரை வள்ளிக் கிழங்கு(உப்பு போட்டு வேக வைத்தது), சுண்டல், வடை, பயத்த‍ங்கஞ்சி எல்லாம் செய்து நைவேத்தியம் செய்வார்கள். அன்று காலையிலிருந்து விரதம் இருப்ப‍வர்கள் ஒன்றும் சாப்பிடாமல் இரவு தான் சாப்பிடுவார்கள். (காலையில் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டுக் கொள்ள‍லாம்).

புட்டு ஏற்கனவே செய்முறையில் உள்ள‍படி செய்ய‍வும்.
சக்க‍ரவள்ளிக்கிழங்கில் உப்பு போட்டு வேக வைக்கவும்.
கடலைப்பருப்பு சுண்டல் 1/2 டம்ளர் போட்டு செய்ய‍வும்.

ப‌யறு சூடு பண்ணி கொதிக்கும் நீரில் போட்டு வேக வைத்து வெல்ல‍ம் போட்டு ஏலக்காய் போட்டு செய்ய‍வும்.

சிவன் பாடல்கள், ஸ்தோத்திரங்கள் நாமாவளிகள் சொல்லி, அர்ச்ச‍ னை செய்து (வில்வம் மிக விசேசம்) தேங்காய் , பழம், வெத்த‍ லை பாக்கு வைத்து பூசை செய்ய‍வும்.