Thursday, April 14, 2011

புது வருடப் பிறப்பு - விஷு

சித்திரை ஒன்றாம் தேதி, விஷு (புது வருடப் பிறப்பு) கனி காணுதல் என்னும் பண்டிகை யாகும். முதல்நாளே வீட்ட‍ச் சுத்த‍ம் செய்து, கோலம் போட்டு, செம்ம‍ண் இட வேண்டும். சுவாமி அறையைத் துடைத்து விட்டு கோலம் போட்டு, எல்லா படஙகளையும் துடைத்து, சந்தனம், குங்குமம் இட்டு, முகம் பார்க்கும் கண்ணாடியை ஒரு கோலம் போட்ட‍ பலகையின் மீது வைத்து, சந்தனம், குங்குமம் இட வேண்டும்.

கண்ணாடிக்கு முன்னால், சின்ன‍ச் சின்ன‍க் கிண்ண‍ங்களில் அரிசி, பருப்பு, உப்பு, மஞ்சள் பொடி, குங்குமம் வைக்க‍ வேண்டும். கண்ணாடிக்கு நகைகளைப் போட்டு அலங்காரம் செய்ய‍ வேண்டும். ஒருபெட்டியில் எல்லா நகைகளையும் வைத்து வெத்த‍ லை பாக்கு, எல்லாவித பழங்கள் முக்கியமாக (மா, பலா, வாழை), தேங்காய், புதுத் துணி எல்லாவற்றையும் வைத்து அலங்காரம் செய்ய‍ வேண்டும்.

மறுநாள் விடியற்காலையில் எல்லாரும் எழுந்திருப்ப‍து முன்னால் எழுந்து பல் தேய்த்து முகம் கழுவி, பொட்டு இட்டுக் கொண்டு, ஆண்டவனை, இந்த வருடம் முழுவதும் நல்ல‍ வருடமாக எல்லாருக்கும் அமைய வேண்டும். எல்லாரும் சுகமாக நன்றாக இருக்க வேண்டும், என்று மனதில் பிரார்த்தித்துக் கொண்டு விளக்கேற்றி எல்லா மங்கலப் பொருட்களையும் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டு, பிறகு, வீட்டில் உள்ள‍வர்களை எழுப்பி கண்ணை மூடிக் கொண்டு வந்து சுவாமி அறையின் முன் வந்து, சுவாமியைப் பார்க்க‍ சொல்ல‍ வேண்டும். பிறகு, கண்ணாடியில் அதற்குமுன் உள்ள‍ மங்கலப் பொருட்களைப் பார்த்து, கண்ணில் தொட்டு ஒற்றிக் கொண்டு நமஸ்காரம் செய்ய‍ சொல்ல‍ வேண்டும்.

பிறகு எப்போதும் போல் அன்றாட வேலைகளைச் செய்து கொள்ள‍லாம். அன்று எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்க‍ள் சொல்ல‍ வேண்டும். பெரியவர்களுக்கு நமஸ்காரம் செய்து ஆசிர்வாதம் வாங்கிக் கொள்ள‍ வேண்டும்.

பக்க‍த்தில் உள்ள‍ கோயில்களுக்குச் சென்று வரலாம். அன்று சமையலில் வேப்ப‍ம்பூ கட்டாயம் சேர்க்க‍ வேண்டும். பாயசம், மாம்பழம், வேப்ப‍ம்பூ போட்டு புளிப்பச்ச‍டி அவசியம்.

Tuesday, April 5, 2011

ஸ்ரீ ராம நவமி

பெரும்பாலும் பங்குனி மாதக் கடைசியில் வரும். சில சமயங்களில் சித்திரை முதல் வாரம் கொண்டாடுவார்கள். ஸ்ரீ ராம நவமி, பங்குனி மாதம், புனர்பூசம் நட்சத்திரத்தில் வருகிறது. அன்று ராமர் புண்ணிய பாரதத்தில் உதித்த‍ நன்னாளாகும்.

அன்று வாசலில் செம்ம‍ண் இட்டு கோலம் போட வேண்டும். குளித்து விட்டு விளக்கேற்றி இராமர் பட்டாபிஷேகப் படத்தை, ஒரு கோலம் போட்ட‍ பலகையின் மீது வைத்து ராமருக்குச் சந்தன குங்குமம் இட்டு, பூமாலைகள் போட்டு, பஞ்சு வஸ்த்ரம் சாத்தி, ராம நாமாவளிகளைச் சொல்லி பூஜை செய்ய‍ வேண்டும். (கிரமமாக செய்ய‍ வேண்டுமென்றால், ராமர் அஷ்டோத்திரம் படித்து பூஜை செய்ய‍லாம்)


ராமருக்குப் பிடித்த‍மான பாயசம், கோசம்பரி, நீர்மோர், பானகம், தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு வைத்து நைவேத்தியம் செய்ய‍ வேண்டும். பத்து நாளும், ராமர் படத்தை வைத்து பூஜை செய்து, தினமும் ராமர் பற்றிய பாட்டுகளை ஸ்லோகங்களைச் சொல்லி இரண்டு வேளையும் ஆரத்தி எடுத்து பத்து நாள் முடிக்க‍ வேண்டும். அக்க‍ம் பக்க‍ம் உள்ள‍வர்களை, தெரிந்தவர்களைக் கூப்பிட்டுத் தாம்பூலம் கொடுத்து, நீர்மோர், பானகம், சுண்டல், கோசம்பரி வினியோகம் செய்ய‍ வேண்டும்.