நான்கு மணி நேரத்துக்கு முன்னர், கடலைப் பருப்பு, தட்டைப்பயறு தனித்தனியாக ஊற வைத்து, குளித்துவிட்டு வந்து வேகவிடவும். உப்புக் கொழுக்கட்டைக்கு கடலைப்பருப்பு, இனிப்புக் கொழுக்கட்டைக்கு தட்டைப் பயறு போட வேண்டும். ஏற்கனவே கொழுக்கட்டை செய்யும் முறை சொல்லி இருப்பதைப் பார்த்து செய்யவும். வெண்ணை வாங்கி வைத்துக் கொள்ளவும்.
நோன்புச் சரடு ஒரு வாரம் முன்ன ரே வாங்கி வைத்து விடவும். காலையில் குளித்ததும், சரடுக்கு பச்சை மஞ்சள் குறுக்காக ரவுண்டாக நறுக்கி ஊசியால் ஓட்டை போட்டு, சரடை நுழைத்து மத்தியில் கட்ட வேண்டும். அதனுடன், மல்லிகை, மரிக்கொழுந்து, அரளி வைத்துக் கட்டலாம். தேங்காய்ப் பழம் வெத்த லை பாக்கு வைத்து நைவேத்தியம் செய்ய வேண்டும். இரண்டு நுனி இலை போட்டு ஸ்வாமிமுன் மாக்கோலம் போட்டு (வாசலிலும் போட வேண்டும்), இலையை அதன் மேல் போட்டு நைவேத்யமாக உப்பு கொழுக்கட்டை, வெல்லக் கொழுக்கட்டை, வெண்ணெய் வைக்க வேண்டும்.
காமாட்சி அம்மனுக்கு பூசை செய்து,
ஓரடையும் தட்டி வைத்து
உருகாத வெண்ணை வைத்து
நோன்பு நோற்றேன்
ஒருக்காலும் என்கணவர்
எனைவிட்டுப் பிரியாதிருக்க வேண்டும் தாயே!
என்று சொல்லி நமஸ்காரம் செய்ய வேண்டும்.
சரடுக்குப் பூசை செய்து, கணவர் கையால் கழுத்தில் கட்டிவிடச் சொல்லவும். அவருக்கு நமஸ்காரம் செய்யவும்.
மங்களே மங்களதாரே
மாங்கல்யே மங்கலப்ரதே
மங்களார்த்தம் மங்களேசி
மாங்கல்யம் தேஹிமே சதா!'
என்று சொல்ல வேண்டும். தினமுமே இதை நமஸ்காரம் செய்யும் போது இரண்டு வேளையும் சொல்லலாம்
பிறகு சுவாமி முன் போட்ட இலையில் உட்கார்ந்து, ஒவ்வொரு அடை எடுத்து சாப்பிட்டுவிட்டு மீதியைக் கணவரைச் சாப்பிடச் சொல்ல வேண்டும். அன்று ஒரு நாள் மட்டும் மனைவி சாப்பிட்ட பிறகு கணவர் சாப்பிடுவது என்று வழக்கத்தில் உள்ளது.
தினமுமே காலையில் கணவர் பாதங்களைத் தொட்டு நமஸ்காரம் செய்து விட்டு திருமாங்கல்யத்தைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு தான் எழுந்திருக்க வேண்டும். காலையில் பூஜை முடிந்த பிறகு கணவருக்கு நமஸ்காரம் செய்து ஆசிர்வாதம் செய்ய சொல்ல வேண்டும். வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்களுக்கும் செய்யலாம்!