வைகாசி மாதம், கரூரில் மாரியம்மன் பண்டிகை மிகவும் பிரசித்தம். அம்மனுக்கு முதல் காப்பு கட்டியதிலிருந்தே, கம்பத்திற்குத் தண்ணீர் ஊற்ற ஆரம்பித்து விடுவார்கள். மாரியம்மனுக்கு ஒரு வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் நடைபெறும்.
அன்று கோயிலுக்குச் சென்று பால் வாங்கிக் கொண்டு போய் கொடுத்துவிட்டு மணமுள்ள பூக்க ளை வாங்கிக் கொண்டு போய்க் கொடுத்து நமஸ்காரம் செய்து விட்டு வரவேண்டும்.
இரண்டாம் காப்பு கட்டியபிறகு, திருவிழா (அக்னி சட்டி, அலகு குத்தி எடுப்பார்கள்) மூன்று நாட்கள் பால்குடம் நடக்கும். பண்டிகை நாட்களில் ஒரு வெள்ளிக்கிழமை மாரியம்மனுக்கு வீட்டில் மாவிளக்குப் போட வேண்டும். ஒரு சொம்பில் நிறைய நீர் ஊற்றி, அதில் மஞ்சள் பொடி, விபூதி, குங்குமம் போட்டு, வேப்பந்தழை நிறைய வைத்து ஒரு குழவிக்கல்லை அதில் செருகி அதற்கு கண்மலர் வைத்து விபூதி இட்டு மஞ்சள் பூசி, சந்தனம் குங்குமம் இட்டு, மாலைகள் போட்டு, ஒரு இரவிக்கைத் துணியை சொம்பிற்குப் பாவாடையாகக் கட்டி, அம்மனுக்கு, நகைகள் போட்டு, அலங்காரம் செய்ய வேண்டும்.
அன்று விரதம் இருந்து, சமைத்து, பாயசம் வைத்து, சுவாமிக்கு (சாதம், பருப்பு, பாயசம் ) மாவிளக்கு போட்டு இரண்டு தேங்காய், வெற்றிலை பாக்கு, பழம, நீர்மோர், பானகம் வைத்து, மாரியம்மனை வேண்டிக் கொண்டு பூஜை செய்ய வேண்டும். தீபாராதனை செய்து, தேங்காய் பழம் உடைத்து, ஆரத்தி எடுத்து, முடிவு செய்ய வேண்டும். அடுத்த நாள் காலை குளித்து விட்டு, சுவாமிக்கு கற்பூரம் காட்டி, எடுத்து வைத்துவிட்டு, அந்தச் சொம்பில் உள்ள நீரை மாரியம்மன் கோயிலில் உள்ள கம்பத்தடியான் மீது ஊற்ற வேண்டும். இந்த 15 நாள் பண்டிகையில், நம்மால் முடிந்த அளவுக்கு - மூன்று நாளோ, ஒரு நாளோ - கோவிலுக்குச் சென்று மாரியம்மன், கம்பத்தடியானுக்கு, தண்ணீர் ஊற்றி வேண்டிக் கொண்டு வர வேண்டும்.
No comments:
Post a Comment