எங்கள் மாமியார் அம்முலு என்னும் அலமேலு ஸ்ரீதரன், எங்கள் வசதிக்காக எழுதிக் கொடுத்த பண்டிகை மற்றும் சமையற் குறிப்புகளைச் சேமிக்க வே இந்தப் பகுதி
Showing posts with label நவராத்திரி. Show all posts
Showing posts with label நவராத்திரி. Show all posts
Tuesday, October 23, 2012
விஜயதசமி
விஜயதசமி அன்று காலையில் விளக்கேற்றி மறு பூஜை செய்து பூஜையில் வைத்த புத்தகம் அல்லது வாத்தியம் வாசிக்க வேண்டும்.
அன்று இரவு பால் நைவேத்தியம் செய்து ஆரத்தி எடுத்து சுவாமியைப் படுக்க வைக்க வேண்டும். அதாவது ராமர் சீதை பொம்மைக்கு நலங்கு வைத்து பத்தியம் பாடி பக்கத்தில் ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் வைத்து கற்பூரம் காட்டிப் படுக்க வைக்க வேண்டும்.
அடுத்த நாள் காலை கற்பூரம் காட்டிவிட்டு சுவாமியை பள்ளி எழுச்சி பாடி நிமிர்த்தி வைக்க வேண்டும். பிறகு நமஸ்காரம் செய்து விட்டு நம்முடைய சௌகரியம் போல் பொம்மைகளைத் துடைத்து துணி சுற்றிப் பெட்டியில் பூச்சி உருண்டை நிறைய போட்டு பத்திரமாக உடையாமல் எடுத்து வைக்க வேண்டும்.
சரஸ்வதி பூஜை
நவராத்திரி ஒன்பதாம் நாள் சரஸ்வதி பூஜை அன்று, வீடு வாசல் சுத்தம் செய்து, கோலம் போட்டு, நாம் படித்த புத்தகங்கள், பேனா, பென்சில், சுலோக புத்தகங்கள், வாத்தியங்கள், அளக்கும் படி, கத்தரிக்கோல் போன்றவற்றை, ஒரு பெட்டியின் மீது அடுக்கி, அதன்மேல் லட்சுமி, சரஸ்வதி, பொம்மையை தனியாக எடுத்து வைத்து ரவிக்கை துணி சார்த்தி, பஞ்சு வஸ்திரம் போட்டு இனிப்பு அப்பம் வார்த்து பூஜை செய்ய வேண்டும்.
மசால் வடையும், சுகியனும் செய்ய வேண்டும். சரஸ்வதி மேல் சுலோகங்கள் சொல்லி பாட்டு பாடி, தேங்காய், பழம் வெற்றிலை பாக்கு வைத்து பூஜை செய்து ஆரத்தி எடுத்து முடிக்க வேண்டும்.
நவராத்திரி
புரட்டாசி மாதம் அம்பாளுக்கு நவராத்திரி பண்டிகை வரும். அமாவாசையிலிருந்து 10 நாளும், மிகவும் விசேஷமாக பூஜைகள் நடக்கும். அமாவாசையன்று கொலுப் படிகள் கட்டி எல்லா பொம்மைகளும் வைப்பார்கள். 3, 5, 7, 9, 11 என்று படி கட்டுவார்கள். அதில் லட்சுமி, சரஸ்வதி, பார்வதி பொம்மைகள் கண்டிப்பாக இருக்கும். விநாயகர், தசாவதாரம், அஷ்டலட்சுமி, முருகன், பார்வதி, பரமசிவன் என்று எல்லா தெய்வங்களின் பொம்மைகளை வைத்துப் படி வைப்பார்கள்.
கடைசி படியில் குளம் கட்டி கோயில் பொம்மை, குழந்தைகளுக்குப் பிடித்தமான பார்க், விளையாட்டு பொம்மைகளை வைத்து அலங்காரம் செய்வார்கள். முதல் நாளன்று ஒரு கலசத்தில் அரிசி, பருப்பு, வெல்லம், ஒரு ரூபாய் போட்டு மாவிலை வைத்து தேங்காய், மாதுளம் பிஞ்சு வைத்து நல்ல நேரம் பார்த்து கலசம் வைப்பார்கள். கலசத்தில் அம்பாளை ஆவாஹனம் செய்து பூஜை பண்ண வேண்டும். இரண்டு வேளையும் கொலு அருகில் விளக்கேற்றி ஆரத்தி எடுக்க வேண்டும்.
மாலையில் தினம் சுண்டல் செய்து நைவேத்தியம் செய்து எல்லாரையும் கூப்பிட்டுக் கொடுக்கலாம். தினமும் காலையில் அம்பாளுக்குப் பிடித்த கலந்த சாதங்கள், பாயசம் ஏதாவது ஒன்று செய்ய வேண்டும். லலிதா சகஸ்ர நாமம் படிக்கலாம். தேவி மகாத்மியம் கதையைப் படித்தால் மிகவும் நல்லது. அம்பாளைப் பற்றிய பாடல்களை ஸ்லோகங்களைச் சொல்ல வேண்டும். அஷ்டலட்சுமி ஸ்லோகம், மகிஷாசுர மர்த்தினி, கனகதாரா ஸ்தோத்ரம், சௌந்தர்ய லஹரி போன்ற அம்பாளின் ஸ்லோகங்களைப் பாராயணம் பண்ணலாம்.
நவராத்திரியில் ஒரு நாள் 2 சுமங்கலிகளுக்கு சாப்பாடு போட்டு வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், கண்ணாடி, சீப்பு, வளையல் வைத்து மருதாணி ரவிக்கைத் துணி வைத்துக் கொடுக்க வேண்டும். கல்யாணம் ஆகாத ஒரு கன்னிப் பெண்ணுக்கு (10 வயதுக்குள்) பாவாடை அல்லது கவுன் வாங்கிக் கொடுக்க வேண்டும்.
அன்று சமையலில் பாயசம் அல்லது சர்க்கரைப் பொங்கல், பருப்பு, தயிர்பச்சடி, கறி, கூட்டு, சாம்பார், ரசம், வடை செய்ய வேண்டும். அவர்கள் சாப்பிட்ட பின் தான் நாம் சாப்பிட வேண்டும். தினம் ஒரு சுண்டல் செய்ய வேண்டும். ஒரு நாளைக்குப் புட்டு செய்யலாம். ஒரு நாள் பொட்டுக்கடலை உருண்டை, மைதாமாவு பிஸ்கட், கூட செய்யலாம்.
Subscribe to:
Posts (Atom)