Tuesday, July 5, 2011

வரலெக்ஷ்மி அம்மன் பூஜை

வ‌ரலட்சுமி அம்ம‍ன் பண்டிகை, ஒவ்வொரு வருடமும், ஆடி கடைசி வெள்ளிக்கிழமை அல்ல‍து, ஆவணி மாதம் முதல் வார வெள்ளிக்கிழமையிலோ வரும். கல்யாணமான வருடம், ஆடியில் பண்டிகை வந்தாலும், பூஜை எடுத்து வைப்பார்கள். முதல் வருடம் பண்டிகை எடுத்து வைக்க‍வில்லை என்றால் ஆவணி மாதம் வரும் வெள்ளிக்கிழமையன்று வரும் பண்டிகையில் தான் பூஜை எடுத்து வைக்க‍ வேண்டும். பூஜை எல்லாரும் செய்து விட முடியாது. மாமியார் வீட்டில் செய்யும் பழக்க‍ம் இருந்தால் தான் அந்தப் பெண் பூஜை செய்ய‍ முடியும்.

பண்டிகைக்கு ஒரு வாரம் முன்ன‍ ரே வீட்டை ஒட்டடை அடித்து, சுத்த‍ம் செய்து, சுவாமி அறையைச் சுத்த‍ம் செய்து, சுண்ணாம்பு அடிக்க‍ வேண்டும். பிறகு பூஜை அறையில் அம்ம‍ன் முகத்தை வரைந்து, மண்டபம் வரைய வேண்டும். இரண்டு பக்க‍மும் வாழை மரம் வரைய வேண்டும்.

இரண்டு நாட்களுக்கு முன்னரே கலசத்தைத் தயார் செய்ய வேண்டும். ஒரு கலசத்தில் (தாமிர சொம்பு அல்லது வெள்ளிச் சொம்பு) சாஸ்திரத்துக்காக சுண்டாம்பு தடவி சொம்பில் அம்மன் முகம் வரைய வேண்டும். கொட்டாங்குச்சியை நெருப்பில் சுட்டு அணைத்து அந்தக் கரியைச் சுத்தமான இடத்தில் சிறிது நீர் ஊற்றி மை போல கருப்பாக வரும். அதில் ஒரு பிரஷ் அல்லது ஈர்க்குச்சியைக் கொண்டு அதில் தொட்டு அம்மன் முகம் வரைந்து காய வைக்க வேண்டும். நன்றாக காய்ந்ததும் சொம்பின் கழுத்தில் கருகமணி, காதோலை, நகைகள் போட்டு அலங்காரம் செய்ய வேண்டும். பின்னர் சொம்பில் 1¼ டம்ளர் பச்சரிசி, 2 டீஸ்பூன் துவரம்பருப்பு, 1 அச்சு வெல்லம், 1 எலுமிச்சம் பழம், 2 வெத்தலை பாக்கு, 2 திராட்சை, 2 பேரிச்சம்பழம், 2 மஞ்சள்கிழங்கு, 1ரூபாய் நாணயம் போட்டு நிரப்ப வேண்டும். பின் நல்ல முற்றின தேங்காயை மஞ்சள் தடவி சந்தன குங்குமம் இட்டு சொம்பின் மேல் வைக்கவும். மாவிலை ஒரு கொத்து, தாழம்பூ 2 மடல் செருக வேண்டும். தேங்காயின் உச்சியில் அம்மன் முகத்தைச் செருகி நூலால் கட்டி விடவும். கலசம் தயார். ஒரு தட்டில் பச்சரிசி நிரப்பி கலசத்தை அதில் வைத்து விடவும். கலசத்திற்கு 7,9,11, ஒற்றைப்படை எண்களில் மாவிலை செருக வேண்டும்

பூஜை அறையைச் சுத்தம் செய்து ஒரு மர ஸ்டூல் வைத்து நடுவில் பலகை வைத்து நாலுபக்கம் அல்லது, 2பக்கம் வாழைக் கன்றைக் கட்டவும். மாக்கோலத்தால் வீடெங்கும் கோலம் போட வேண்டும். அம்மனுக்குப் பஞ்சினால் வஸ்திரம் செய்து போட வேண்டும். புது ரவிக்கைத் துணி சொம்பின் பின்புறமாக அம்மனுக்குச் சுற்றிவிடவும். எல்லாவித பழங்களும், வெற்றிலை, பாக்கு, சந்தனம், குங்குமம், விதவிதமான பூக்கள் சேகரித்துப் பூஜைக்குத் தயார் செய்ய வேண்டும்.

வரலட்சுமி பண்டிகை அன்று எண்ணெய் தேய்த்துக் குளித்து, தலையை உலர்த்திப் பின்னி பூ வைத்துக் கொண்டு, 9 கஜம் கட்டிக் கொண்டு விளக்கேற்றி வைக்கவும். வாசல்படியில் முன்புறம் சிறிய கோலம் போட்டு அம்மனை தட்டுடன் அங்கு வைத்து பூ, அட்சதை போட்டு, நமஸ்காரம் செய்து கற்பூரம் பத்தி காண்பித்து வெற்றிலை, பாக்கு, பழம் நைவேத்தியம் செய்து அம்மனை மெதுவாக எடுத்துக் கொண்டு ‘பாக்யாப்த லெக்ஷ்மி பாரம்மா’ என்று பாடிக் கொண்டு பூஜை அறையில் மண்டபத்தில் பலகையின் மீது வைத்து அம்மனை மலர்களால் அலங்காரம் செய்யவும்.

முதல்நாளே, பச்சரிசி இட்லிக்கு 1 டம்ளர் பச்சரிசி, ¼ டம்ளர் உளுந்து ஊற வைத்து உப்பு போட்டு கரைக்கவும். கொழுக்கட்டை மாவை மிக்ஸியில் 4 நாளைக்கு முன்பாகவே அரைத்து சலித்து காய வைத்து தயார் செய்யவும்.

பாயசம் : கொழுக்கட்டை மாவை மெலிதாக திரித்து சின்னச் சின்ன உருண்டையாக உருட்டிக் கொதிக்கும் நீரில் போட்டு வெந்ததும், வல்லம் போட்டு, பால் விட்டு, ஏலக்காய்ப் பொடு போட்டு செய்யவும்.

வடைக்கு ½ டம்ளர் கடலைப்பருப்பு, ¼ டம்ளர் துவரம்பருப்பு, ¼ டம்ளர் உளுந்து, பச்சைமிளகாய், உப்பு, பெருங்காயம் போட்டு, மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். 10 வடை நைவேத்யத்துக்கு தட்டி வைத்துக் கொண்டு, மீதி மாவைப் பச்சையாக கொழுக்கட்டைக்கு வைத்து உப்பு கொழுக்கட்டை செய்யவும்.

இனிப்புக் கொழுக்கட்டை : 1 மூடி தேங்காயைத் துருவி, வாணலியில் வதக்கி, தூள் வெல்லம் போட்டு, 1 ஸ்பூன் நெய் ஊற்றி வதக்கவும். ஏலக்காய் போடி போட்டு பூரணம் தயாராகிவிடும்.

எள்ளுக் கொழுக்கட்டை: கருப்பு எள்ளை ஊற வைத்து, அலம்பி வடிகட்டி, நன்றாக தேய்த்து விட்டு வாணலியில் போட்டு வெடிக்க விட வேண்டும். சிவந்ததும் எடுத்து ஆறியபின் புடைத்து விட்டு வெல்லம் சேர்த்து மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும். எள்ளுப் பூரணம் ரெடியாகிவிட்டது.

கொழுக்கட்டை மாவு தயாரானவுடன் தேங்காய் பூரணம், வடைமாவு, எள்ளுப் பொடி போட்டு, மூடி கொழுக்கட்டை செய்யவும்

சாதம் 1 டம்ளர், சிறிது பருப்பு வேக வைத்து, உப்பு போட்டு சுவாமிக்கு மகா நைவேத்தியம் தயார் செய்யவும்.

பூஜை செய்வதற்கு முன் நைவேத்யங்களை தயார் செய்து வைத்துக் கொண்டு பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.

மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும். நோம்பு சரடு இரண்டு அல்லது நான்கு எடுத்து, பூ கட்டி, ஸ்வாமி பாதத்தில் வைக்கவும். புத்தகத்தில் உள்ளபடி பூஜை செய்து, ஆரத்தி எடுத்து, பூஜையை முடிக்கவேண்டும். சுமங்கலிகளுக்கு தாம்பூல் வைத்து கொடுக்கவும். பூஜை முடித்து கணவரிடம் சரடு கொடுத்த கையில் கட்டிக் கொண்டு நமஸ்காரம் செய்யவேண்டும்.

சாயந்திரம் விளக்கேற்றி, கடலைப்பருப்பு சுண்டல் நிவேத்யம் செய்து, அம்மன் கதை படித்து, மங்களம் பாடி கற்பூரம் ஏற்றி சுமங்கலிகளுக்குத் தாம்பூலம் கொடுக்கவும்.

மறுநாள் காலை குளித்துவிட்டு விளக்கேற்றி வெற்றிலை தேங்காய் பழம் வைத்து நைவேத்தியம் செய்து புனர்பூஜை செய்யவும் (லக்ஷ்மி அஷ்டோத்திரம் படித்து) அம்மனை வடக்குப் பக்கம் நகர்த்தி வைத்து அன்று இரவு கற்பூரம் ஏற்றி நமஸ்காரம் செய்து, இதே போல் அடுத்த வருடமும் நீ நிறைந்து எங்கள் வீட்டுக்கு வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு நமஸ்காரம் செய்து அம்மனை மெதுவாக கலசத்துடன் எடுத்து அரிசி உள்ள பாத்திரத்தில் வைத்து விடவும். பக்கத்தில் ஒரு விளக்கை வைக்கவும்.

பிறகு அடுத்த நாள் காலை அம்மனை எடுத்து பத்திரமாக துடைத்து அம்மன் மேல் உள்ள நகைகளை சிறிது நேரம் கழுத்தில் போட்டுக் கொண்டு கலசத்தில் உள்ள அரிசியை எடுத்து அடுத்த வெள்ளிக்கிழமை சக்கரை பொங்கல் செய்து சாப்பிடவும். அதில் உள்ள எலுமிச்சம்பழத்தை சக்கரை போட்டு ஜூஸ் சாப்பிடவும்.

பூஜை செய்த பூவை எல்லாம் எடுத்து கால் படாத இடத்தில் கொட்டி விடவும். - அல்லது நீரில் போட்டுவிடலாம்.

இத்துடன் வரலட்சமி அம்மன் பூஜை நிறைவுற்றது.

No comments:

Post a Comment