சித்தி வினாயகரே, சிவனுடைய குமாரரே
பக்தியினால் உனை வேண்டி பிரார்த்தனை செய்து பாடுகிறேன்.
விக்கினங்கள் இல்லாது வேண்டியே சரஸ்வதியை
சரணம் பண்ணி தியானம் பண்ணி சம்ப்ரதாயமாய் தமிழ் பாடவே.
மகாலட்மியை த்யானம் பண்ணி மகிமைதனைப் பாடவே.
க்ஷீராப்தியில் பிறந்தவள் ;
சிருங்கார ஆனந்த ரூபமவள்;
கமல ஸ்தலத்தில் உதித்தவள்;
அனைவருக்கும் தேவியவள்
மகாவிஷ்ணு மார்பில் அணிந்தவள்
மங்களமாய் வராள் பாருங்கோடி....
குண்டிலம் என்கிற பட்டினம் தனில் கூர்மொழியாள் சாருமதி
பக்தி சிரத்தையுடனே கூட பர்த்தாவை பூஜை செய்யறவள் சாருமதி
அனுஷ்டானங்களை நீதியுடனே முடிக்கிறவள்.
அந்தப்புறம் தனில் சயனித்திருக்கும் அர்த்தராத்திரி வேளையிலே
அம்மனும் வந்து தட்டி எழுப்பினாள்.
அதிசயத்துடன் சாருமதியும் எழுந்தாள்.
தங்கக் கடகம் கலகலவென சுருட்டிக் கொண்டு
எழுந்திருந்து சுற்றி பிரதக்ஷிண நமஸ்காரம் செய்து,
‘யாரம்மா நீ?’ என்று கேட்க,
அப்போது சொன்னாள் அம்மனவள்
‘வரலட்சுமி நான் வந்தேன்’ என்றாள்.
வகைவகையாய் பூஜை பண்ணு என்றாள்
எவ்வித பூஜை செய்வது? என்று எடுத்துக் கேட்டாள் கனவிலே
ஸ்ராவண மாதம் சுக்ல பக்ஷம் பூர்ணசுக்ரவாரந்தன்னில்
சாயங்காலம் ஸ்நானம் பண்ணி
சர்வாபரண பூஷிதையாய் பூரண கலசம் வைக்கச் சொன்னாள்
அம்மனும் பூஜைகளையும் செய்யச் சொன்னாள்.
இட்லி கொழுக்கட்டை, மோதக பட்சணம், பாயசமும் நைவேத்யம் வைக்கச் சொன்னாள்
அம்மனும் அந்தர்தியானம் ஆனாள்.
அப்போ முழித்தாள் சாருமதி
மஞ்சத்தின் மேலே இருந்து கொண்டு மகிழந்து கொண்டு, சிரித்து கொண்டு, பந்து ஜனங்களை வைத்துக் கொண்டு வேடிக்கையாக சொல்லலுற்றாள்.
‘கேளுங்கோடி தோழி, கேளுங்கோடி! கண்ட கனவையும் கேளுங்கோடி!
அம்மனும் வந்து தட்டி எழுப்பின அதிசயத்தையும் கேளுங்கோடி!
பூஜாக்ரமங்களைச் சொன்னவுடன் பூரித்து சந்தோசமானவுடன், ஸ்ராவண மாசம் எப்போ வரும் என்று சந்தோசமாகவே காத்திருந்தாள்.
அப்போ வந்ததே ஸ்ராவண மாசம், அத்தனை பேருமாய்க் கூடிக் கொண்டு, அரண்மனைகள், அந்தப்புரங்கள், அலங்காரங்கள் செய்தனராம். மாளிகை தோறும் மாக்கோலம் போட்டு மகரத் தோரணம் கட்டினாளாம். அந்த குருவாரந்தன்னில் அத்தனை பேருமாய் கூடிக் கொண்டு திவ்யமான பஞ்சபக்ஷ பாயசங்கள் சமைத்தனராம். அத்தனை பேருமாய்க் கூடிக் கொண்டு அவர்கள் மாணிக்கக் கிண்டியை கையில் எடுத்துக் கொண்டு மகிழ்ந்து கொண்டு, சிரித்துக் கொண்டு, நதிகளிலே ஸ்நானம் பண்ணிக் கொண்டு, நல்ல வஸ்திரம் தரித்துக் கொண்டு திவ்யமான பட்டு பட்டாடைகள் ஆபரணங்கள் பூட்டிக் கொண்டு, அந்தச் சுக்ர வாரந்தன்னில் அந்த அம்மனை அழைக்க வேண்டும் என்று, தலைவாசல் கிரகந்தன்னில் சந்தோஷமாகவே அம்மனை வைத்தாளாம்.
பாலவல்லி பந்தலிலே பக்தியுடன் பூஜை பண்ணினாளாம். தாழம்பூவாம், தாமரைப்பூவாம், தாயாருக்குச் சூட்டினாளாம். தாளங்களாம், மேளங்களாம், மிகுதியான வாத்யங்களாம், ஐந்து வகை சாதங்களாம், அனேக கோடி பழ வகையாம், இட்லி மோதக பக்ஷணவகைகள், பாயாசம் நைவேத்யம் பண்ணினாளாம்.
பஞ்ச ஹாரத்தி, கற்பூர ஹாரத்தி, பக்தியுடன் தான் எடுத்தாளாம். துலங்கும் மணிமண்டபத்தில் பக்தர், குஞ்சு, குழந்தைகளைப் பார்க்க வந்த பிராமணர்க்கெல்லாம், அத்தனை பேருக்கும் அட்சதை போட்டு, அழகாக வாயன தானம் கொடுத்தாளாம். உன்னாலே சாருமதி இத்தனை பாக்கியம் அடைந்தோம், வீட்டுக்குப் போய் வரோம் என்றவர்கள் விடை பெற்றுச் சென்றார்கள்.
யானை குதிரையெல்லாம் வீடு தோறும் கட்டி இருக்காம், அடையாளங்கள் தெரியாமலே ஆச்சரியப்பட்டுப் போனார்களாம். அஷ்டலட்சுமி வாசம் செய்வாள். அன்னபூரணி துணை இருப்பாள், பரம சிவன் சொன்ன வார்த்தை கேட்டு பார்வதி மகிழ்ந்திருந்தாள். வரலட்சுமி விரதம் செய்த பேருக்கு வத்தாமல் பால் பசுவும், சந்தான சம்பத்துகளும், சகல பாக்யமும் தான் தருவாள். அன்புடனே பார்பவர்க்கும், இன்பமுடன் கேட்பவர்க்கும் வாழி வாழி என்று வரமளித்தார் ஈசுவரனார்.
No comments:
Post a Comment