Tuesday, October 23, 2012

நவராத்திரி


புரட்டாசி மாதம் அம்பாளுக்கு நவராத்திரி பண்டிகை வரும். அமாவாசையிலிருந்து 10 நாளும், மிகவும் விசேஷமாக பூஜைகள் நடக்கும். அமாவாசையன்று கொலுப் படிகள் கட்டி எல்லா பொம்மைகளும் வைப்பார்கள். 3, 5, 7, 9, 11 என்று படி கட்டுவார்கள். அதில் லட்சுமி, சரஸ்வதி, பார்வதி பொம்மைகள் கண்டிப்பாக இருக்கும். விநாயகர், தசாவதாரம், அஷ்டலட்சுமி, முருகன், பார்வதி, பரமசிவன் என்று எல்லா தெய்வங்களின் பொம்மைகளை வைத்துப் படி வைப்பார்கள்.

கடைசி படியில் குளம் கட்டி கோயில் பொம்மை, குழந்தைகளுக்குப் பிடித்த‍மான பார்க், விளையாட்டு பொம்மைகளை வைத்து அலங்காரம் செய்வார்கள். முதல் நாளன்று ஒரு கலசத்தில் அரிசி, பருப்பு, வெல்ல‍ம், ஒரு ரூபாய் போட்டு மாவிலை வைத்து தேங்காய், மாதுளம் பிஞ்சு வைத்து நல்ல‍ நேரம் பார்த்து கலசம் வைப்பார்கள். கலசத்தில் அம்பாளை ஆவாஹனம் செய்து பூஜை பண்ண‍ வேண்டும். இரண்டு வேளையும் கொலு அருகில் விளக்கேற்றி ஆரத்தி எடுக்க‍ வேண்டும்.

மாலையில் தினம் சுண்டல் செய்து நைவேத்தியம் செய்து எல்லாரையும் கூப்பிட்டுக் கொடுக்க‍லாம். தினமும் காலையில் அம்பாளுக்குப் பிடித்த‍ கலந்த சாதங்கள், பாயசம் ஏதாவது ஒன்று செய்ய‍ வேண்டும். லலிதா சகஸ்ர நாமம் படிக்க‍லாம். தேவி மகாத்மியம் கதையைப் படித்தால் மிகவும் நல்ல‍து. அம்பாளைப் பற்றிய பாடல்களை ஸ்லோகங்களைச் சொல்ல‍ வேண்டும். அஷ்டலட்சுமி ஸ்லோகம், மகிஷாசுர மர்த்தினி, கனகதாரா ஸ்தோத்ரம், சௌந்தர்ய லஹரி போன்ற அம்பாளின் ஸ்லோகங்களைப் பாராயணம் பண்ணலாம்.

ந‌வராத்திரியில் ஒரு நாள் 2 சுமங்கலிகளுக்கு சாப்பாடு போட்டு வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், கண்ணாடி, சீப்பு, வளையல் வைத்து மருதாணி ரவிக்கைத் துணி வைத்துக் கொடுக்க‍ வேண்டும். கல்யாணம் ஆகாத ஒரு கன்னிப் பெண்ணுக்கு (10 வயதுக்குள்) பாவாடை அல்ல‍து கவுன் வாங்கிக் கொடுக்க‍ வேண்டும்.

அன்று சமையலில் பாயசம் அல்ல‍து சர்க்க‍ரைப் பொங்கல், பருப்பு, தயிர்பச்ச‍டி, கறி, கூட்டு, சாம்பார், ரசம், வடை செய்ய‍ வேண்டும். அவர்கள் சாப்பிட்ட‍ பின் தான் நாம் சாப்பிட வேண்டும். தினம் ஒரு சுண்டல் செய்ய‍ வேண்டும். ஒரு நாளைக்குப் புட்டு செய்ய‍லாம். ஒரு நாள் பொட்டுக்க‍டலை உருண்டை, மைதாமாவு பிஸ்கட், கூட செய்யலாம்.

No comments:

Post a Comment