Wednesday, December 26, 2012

மாட்டுப் பொங்கல்



பொங்கலுக்கு அடுத்த‍ நாள் மாட்டுப் பொங்கல். முதல் வடித்த‍ சாதத்தில், கொஞ்சம் மஞ்சள் பொடி போட்டு, மஞ்சள் கலர் சாதம், சிவப்பு சாதம், சக்க‍ ரை பொங்கல், வெண் பொங்கல், தயிர் சாதம், எல்லாம் பிசைந்து, முதல் நாள் இரவு ரெடி செய்து கொண்டு, மறு நாள் காலையில் சூரிய உதயத்தின் போது, சூரிய வெளிச்ச‍ம் படும் முற்ற‍த்திலோ, மாடியிலோ, கனுப் பொங்கல் வைக்க‍ வேண்டும்.

கோலம் போட்டு, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, மஞ்சள் இலையை மூன்றாகப் போட்டு,அதில் கலந்து பிசைந்த சாதத்தைக் கிள்ளி வைக்க‍ வைண்டும். பிள்ளையாருக்கு விளக்கேற்றி வைத்து, வெற்றிலை பாக்கு, பழம் நைவேத்தியம் செய்து, கற்பூரம் காட்டி, மீதி சாதத்தைக் கரைத்து ஆரத்தி எடுத்து கொட்டிவிட வேண்டும். பிறந்த வீட்டில் சகோதரன் சகோதரிகள் நன்றாக வாழ வேண்டும் என்று பிரார்த்த‍ னை செய்து,

காக்கா பிடி வைத்தேன், கன்றுப் பிடி வைத்தேன், காக்காய்க்கும், கன்றுக்கும் கல்யாணம், குருவிக்கெல்லாம் கொண்டாட்ட‍ம்,
காக்கா கூட்ட‍ம் கலைந்தாலும்,
எங்கள் கூட்ட‍ம் கலையக் கூடாது

என்று சொல்லிக் கொண்டே கனு வைப்பார்கள்.

கனு வைக்கும் முன் வீட்டில் உள்ள‍ பெரியவர்களிடம் மஞ்சள் கிழங்கைக் கொடுத்து, நெற்றியில் மூக்கில் தேய்த்துவிடச் சொல்லி, நமஸ்காரம் செய்ய‍ வேண்டும். கனு வைத்து விட்டு, குளித்து விட்டுத் தான் அடுப்பு பற்ற‍ வைப்பார்கள். அன்று கலந்த சாதம் எல்லாம் செய்வார்கள். அன்று உறவினர்கள், தெரிந்தவர்கள் எல்லாரையும் கண்டு நலன் விசாரித்து பொங்கல் வாழ்த்துச் சொல்லுவார்கள். இது காணும் பொங்கல் என்றும் அழைக்க‍ப் படும்.

தை வெள்ளிக் கிழமை விசேசமானது. நான்கு வெள்ளிகளில், ஏதாவது ஒரு வெள்ளி, வீட்டில், நாமகரி அம்ம‍னுக்கு மாவிளக்கு போட்டு பாம்பு புற்று இருந்தால், அதற்கும், மாவிளக்கு போட்டு, பால் ஊற்றி விட்டு வரலாம்

தைப் பொங்கல்


ஒரு வெண்கலப் பானையில் வெல்ல‍ம் போட்ட‍ சக்க‍ ரைப் பொங்கலும், இன்னொன்றில் வெண் பொங்கலும் செய்ய‍ வேண்டும். பொங்கலன்று காலையில் வாசலுக்கு பெரிய கோலமாக போட வேண்டும். பிறகு குளித்து விட்டு நல்ல‍ நேரம் பார்த்து பொங்கல் பானையை அடுப்பில் வைக்க‍ வேண்டும்.

சக்க‍ ரைப் பொங்கல்
பச்ச‍ரிசி 2 டம்ளர்
பாசிப்பருப்பு அரை டம்ளர்
வெல்ல‍ம் 3 டம்ளர்
ஏலக்காய் பொடி
முந்திரிப்ப‍ருப்பு - 20


பச்ச‍ரிசியையும், பாசிப்ப‍ருப்பையும், சுடபண்ணிக் கொண்டு நன்றாக கழுவி, 2, 3 முறை நீர் களைந்து விட்டு, 3ஆம் முறை எடுக்கும் நீரைப் பாத்திரத்தில் ஊற்ற‍ வேண்டும். சிறிது பால் விட்டு அரை வாழைப்பழம் போட்டு சுவாமி இடத்தில் வைத்து நமஸ்காரம் செய்து விட்டு நல்ல‍ நேரத்தில் அடுப்பில் ஏற்றவும். தண்ணீரும் பாலும் பொங்கி வரும் போது, அரிசி பருப்பை அதில் போட வேண்டும். அரிசி நன்றாக வெந்து பொங்கி வரும்போது, அட்சதை போட்டு பொங்கலோ பொங்கல் என்று சொல்லி அடுப்பிற்கு நமஸ்காரம் செய்ய‍வும். பொங்கலில், ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்து விட்டு, அரிசி பருப்பு குழைந்ததும், வெல்ல‍த்தைப் போட்டு, வெல்ல‍ம் கரைந்து வரும்போது, கால் கப் நெய்யை அதில் ஊற்ற‍வும். ஏலக்காய் படி செய்து போடவும். இறக்கி வைத்து, 1 சிட்டிகை ஜாதிக்காய் நெய்யில் பொரித்து, பொடி செய்து போடவும். முந்திரி, திராட்சை பொரித்து அதில் சேர்க்க‍வும். சக்க‍ ரை பொங்கல் ரெடி.


வெண்பொங்கல், மேல் சொன்ன‍ மாதிரியே அரிசியும் பருப்பும் சேர்த்து வெந்ததும், தேவையான உப்பு போடவும். வாணலியில் நெய் விட்டு, மிளகு, சீரகம் பொடி செய்து, முந்திரிப்ப‍ருப்பு, இஞ்சித் துண்டு, கறிவேப்பிலை தாளித்து, பொங்கலில் சேர்க்க‍வும். கொஞ்சம் பெருங்காயம் போடவும். வெண் பொங்கல் ரெடி.

பொங்கலன்று, மொச்சை, வாழைக்காய், பரங்கிக்காய், அவரைக்காய், பூசணிக்காய் போட்டு புளிக்கூட்டு செய்வார்கள். சாதம், பருப்பு, சக்க‍ ரைப் பொங்கல், வெண்பொங்கல், கூட்டு, தேங்காய், வெற்றிலை, பாக்கு பழம், கரும்பு, மஞ்சள் கொத்து எல்லாவற்றையும் வைத்து, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, சூரியன் சந்திரன் படம் வரைந்து, அதற்கு சந்தனம் குங்குமம் இட்டு பூப்போட்டு கற்பூரம் காண்பித்து, பூஜையை முடிக்க‍ வேண்டும்.


போகிப் பண்டிகை


மார்கழி மாதம் முடியும் போது, போகிப் பண்டிகை வரும். மார்கழி இறுதியிலேயே, வீட்டைச் சுத்த‍ம் செய்து சுண்ணாம்பு அடித்து, செம்ம‍ண் பட்டை இட்டு வீட்டில் உள்ள‍ பழைய பொருட்களை எல்லாம் அப்புறப்ப‍டுத்த வேண்டும். அன்று வாசலில், செம்ம‍ண் இட்டு, கோலம் போடுவார்கள். மார்கழி முப்ப‍து நாட்களுமே, வாசலில், பெரிய பெரிய கோலங்கள் இட்டு பரங்கிப் பூ கொண்டு வந்து கோலத்தின் நடுவில் சாணியை உருட்டி வைத்து பூவே அதில் செருகி வைப்பார்கள்.

போகிப் பண்டிகைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்து, வடை தட்டி பாயசம் செய்ய‍ வேண்டும். போளி செய்ய‍ வேண்டும். அன்று கரும்பு, மஞ்சள், வாழைப்ப‍ழம், தேங்காய், வெற்றிலை பாக்கு, எல்லாம் வாங்கி வருவார்கள். கூடைப் பூ வாங்கி வந்து நல்ல‍ நேரம் பார்த்து, வீட்டு வாசல் பின்பக்க‍ம், வாகனங்கள் எல்லாவற்றிற்கும் காப்பு கட்டுவார்கள்.

2 வெண்கலப் பாத்திரத்தைத் தேய்த்து, சுண்ணாம்பு தடவி, சூரியன் சந்திரன் வரைந்து, மஞ்சள் செடியை கழுத்தில் கட்ட‍ வேண்டும். முதல் நாளே, எல்லாவற்றையும் தயார் செய்து கொள்ள‍ வேண்டும்.

திருவாதிரை


நான்கு நாட்கள் கழித்து திருவாதிரை பண்டிகை வரும். அன்று சிவன் கோயில் காலை 5 மணிக்கு ஆருத்திரா தரிசனம் பார்க்க‍ வேண்டும். அன்று திருவாதிரை களியும், ஏழு காய் கூட்டும், செய்து சுவாமிக்கு பூஜை செய்வார்கள்.

திருவாதிரைக் களி ;
பச்ச‍ரிசி 2 டம்பளர்
பாசிப்பருப்பு அரை டம்பளர்
ஏலக்காய்
முந்திரி
நெய்
தேங்காய்
வெல்ல‍ம் 3 டம்ளர்

அரிசியைக் கழுவி, உடனே வடியவிட்டு, காய்ந்ததும், வாணலியில் போட்டு வறுக்க‍ வேண்டும். பொன் கலராக வரும்போது, அடுப்பை அணைத்து விடவும். பாசிப்பருப்பையும், சுட வைத்துக் கொள்ள‍வும். ஆறியபின், இரண்டையும், ஒன்றாக மிக்ஸியில் போட்டு வெள்ளை ரவை போல பொடித்துக் கொள்ள‍வும். ஒரு கெட்டியான பாத்திரத்தில்,  6 டம்பளர் தண்ணீர் விட்டு, நன்கு காய்ந்ததும், தேங்காயைத் துருவி அதில் போடவும். ஏலக்காய் பொடி செய்து போடவும். ரவையைக் கொட்டி, உப்புமாவைப் போல் வேக விடவும்.

வேறு ஒரு பாத்திரத்தில், வெல்ல‍த்தைக் கரைத்து, கல் மண் போக வடிகட்டி, மறுபடியும் அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும், இறக்கி, வெந்து கொண்டிருக்கும் அரிசி குறுணையில் கொட்ட‍வும். அரை கப் நெய்யைக் காய்ச்சி அதில் விடவும். முந்திரிப் பருப்பு பொன்னிறமாக வறுத்து அதில் போட்டு கலக்க‍வும்.

இதற்கு தொட்டுக் கொள்ள‍, ஏழு காய்கள், ஏழு கொடிக் காய்கள், கிழங்கு வகைகள் பருப்புகள் போட்ட‍ புளிக்கூட்டு செய்து சாப்பிட வேண்டும்.

வைகுண்ட ஏகாதசி


மார்கழி மாதம் 30 நாட்களும், விடியற்காலை ஐந்து மணிக்காவது எழுந்து சீக்கிரம் குளித்து விட்டு, சிவன் கோயில், பெருமாள் கோயில்களுக்குச் சென்று வரலாம். இந்த மாதம் வைகுண்ட ஏகாதசி வரும். அன்று விரதம் இருந்து பெருமாள் கோயிலுக்குச் சென்று பெருமாளைத் தரிசனம் செய்து விட்டு சொர்க்க‍ வாசல் மிதித்து விட்டு வரலாம். அன்று ஒருவேளை மட்டும் பலகாரம் செய்ய‍லாம். வயதானவர்கள் உப்பில்லாமல் ஒரு வேளை மட்டும் சாப்பிடுவார்கள். அடுத்த‍ நாள் துவாதசி அன்று சீக்கிரமே குளித்து விட்டு ஏழு மணிக்குள் சமைத்து விட்டு சீக்கிரமே சாப்பாடும் சாப்பிட்டு விரதத்தை முடிப்பார்கள். அன்று அகத்திக் கீரை பொரியல், நெல்லிக்காய், தயிர்ப்ப‍ச்ச‍டி, எல்லாக் காய்களும் போட்டு புளிக்கூட்டு (குழம்பு), பாயசம் கொஞ்சம் செய்வார்கள்.