Wednesday, December 26, 2012

மாட்டுப் பொங்கல்



பொங்கலுக்கு அடுத்த‍ நாள் மாட்டுப் பொங்கல். முதல் வடித்த‍ சாதத்தில், கொஞ்சம் மஞ்சள் பொடி போட்டு, மஞ்சள் கலர் சாதம், சிவப்பு சாதம், சக்க‍ ரை பொங்கல், வெண் பொங்கல், தயிர் சாதம், எல்லாம் பிசைந்து, முதல் நாள் இரவு ரெடி செய்து கொண்டு, மறு நாள் காலையில் சூரிய உதயத்தின் போது, சூரிய வெளிச்ச‍ம் படும் முற்ற‍த்திலோ, மாடியிலோ, கனுப் பொங்கல் வைக்க‍ வேண்டும்.

கோலம் போட்டு, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, மஞ்சள் இலையை மூன்றாகப் போட்டு,அதில் கலந்து பிசைந்த சாதத்தைக் கிள்ளி வைக்க‍ வைண்டும். பிள்ளையாருக்கு விளக்கேற்றி வைத்து, வெற்றிலை பாக்கு, பழம் நைவேத்தியம் செய்து, கற்பூரம் காட்டி, மீதி சாதத்தைக் கரைத்து ஆரத்தி எடுத்து கொட்டிவிட வேண்டும். பிறந்த வீட்டில் சகோதரன் சகோதரிகள் நன்றாக வாழ வேண்டும் என்று பிரார்த்த‍ னை செய்து,

காக்கா பிடி வைத்தேன், கன்றுப் பிடி வைத்தேன், காக்காய்க்கும், கன்றுக்கும் கல்யாணம், குருவிக்கெல்லாம் கொண்டாட்ட‍ம்,
காக்கா கூட்ட‍ம் கலைந்தாலும்,
எங்கள் கூட்ட‍ம் கலையக் கூடாது

என்று சொல்லிக் கொண்டே கனு வைப்பார்கள்.

கனு வைக்கும் முன் வீட்டில் உள்ள‍ பெரியவர்களிடம் மஞ்சள் கிழங்கைக் கொடுத்து, நெற்றியில் மூக்கில் தேய்த்துவிடச் சொல்லி, நமஸ்காரம் செய்ய‍ வேண்டும். கனு வைத்து விட்டு, குளித்து விட்டுத் தான் அடுப்பு பற்ற‍ வைப்பார்கள். அன்று கலந்த சாதம் எல்லாம் செய்வார்கள். அன்று உறவினர்கள், தெரிந்தவர்கள் எல்லாரையும் கண்டு நலன் விசாரித்து பொங்கல் வாழ்த்துச் சொல்லுவார்கள். இது காணும் பொங்கல் என்றும் அழைக்க‍ப் படும்.

தை வெள்ளிக் கிழமை விசேசமானது. நான்கு வெள்ளிகளில், ஏதாவது ஒரு வெள்ளி, வீட்டில், நாமகரி அம்ம‍னுக்கு மாவிளக்கு போட்டு பாம்பு புற்று இருந்தால், அதற்கும், மாவிளக்கு போட்டு, பால் ஊற்றி விட்டு வரலாம்

தைப் பொங்கல்


ஒரு வெண்கலப் பானையில் வெல்ல‍ம் போட்ட‍ சக்க‍ ரைப் பொங்கலும், இன்னொன்றில் வெண் பொங்கலும் செய்ய‍ வேண்டும். பொங்கலன்று காலையில் வாசலுக்கு பெரிய கோலமாக போட வேண்டும். பிறகு குளித்து விட்டு நல்ல‍ நேரம் பார்த்து பொங்கல் பானையை அடுப்பில் வைக்க‍ வேண்டும்.

சக்க‍ ரைப் பொங்கல்
பச்ச‍ரிசி 2 டம்ளர்
பாசிப்பருப்பு அரை டம்ளர்
வெல்ல‍ம் 3 டம்ளர்
ஏலக்காய் பொடி
முந்திரிப்ப‍ருப்பு - 20


பச்ச‍ரிசியையும், பாசிப்ப‍ருப்பையும், சுடபண்ணிக் கொண்டு நன்றாக கழுவி, 2, 3 முறை நீர் களைந்து விட்டு, 3ஆம் முறை எடுக்கும் நீரைப் பாத்திரத்தில் ஊற்ற‍ வேண்டும். சிறிது பால் விட்டு அரை வாழைப்பழம் போட்டு சுவாமி இடத்தில் வைத்து நமஸ்காரம் செய்து விட்டு நல்ல‍ நேரத்தில் அடுப்பில் ஏற்றவும். தண்ணீரும் பாலும் பொங்கி வரும் போது, அரிசி பருப்பை அதில் போட வேண்டும். அரிசி நன்றாக வெந்து பொங்கி வரும்போது, அட்சதை போட்டு பொங்கலோ பொங்கல் என்று சொல்லி அடுப்பிற்கு நமஸ்காரம் செய்ய‍வும். பொங்கலில், ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்து விட்டு, அரிசி பருப்பு குழைந்ததும், வெல்ல‍த்தைப் போட்டு, வெல்ல‍ம் கரைந்து வரும்போது, கால் கப் நெய்யை அதில் ஊற்ற‍வும். ஏலக்காய் படி செய்து போடவும். இறக்கி வைத்து, 1 சிட்டிகை ஜாதிக்காய் நெய்யில் பொரித்து, பொடி செய்து போடவும். முந்திரி, திராட்சை பொரித்து அதில் சேர்க்க‍வும். சக்க‍ ரை பொங்கல் ரெடி.


வெண்பொங்கல், மேல் சொன்ன‍ மாதிரியே அரிசியும் பருப்பும் சேர்த்து வெந்ததும், தேவையான உப்பு போடவும். வாணலியில் நெய் விட்டு, மிளகு, சீரகம் பொடி செய்து, முந்திரிப்ப‍ருப்பு, இஞ்சித் துண்டு, கறிவேப்பிலை தாளித்து, பொங்கலில் சேர்க்க‍வும். கொஞ்சம் பெருங்காயம் போடவும். வெண் பொங்கல் ரெடி.

பொங்கலன்று, மொச்சை, வாழைக்காய், பரங்கிக்காய், அவரைக்காய், பூசணிக்காய் போட்டு புளிக்கூட்டு செய்வார்கள். சாதம், பருப்பு, சக்க‍ ரைப் பொங்கல், வெண்பொங்கல், கூட்டு, தேங்காய், வெற்றிலை, பாக்கு பழம், கரும்பு, மஞ்சள் கொத்து எல்லாவற்றையும் வைத்து, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, சூரியன் சந்திரன் படம் வரைந்து, அதற்கு சந்தனம் குங்குமம் இட்டு பூப்போட்டு கற்பூரம் காண்பித்து, பூஜையை முடிக்க‍ வேண்டும்.


போகிப் பண்டிகை


மார்கழி மாதம் முடியும் போது, போகிப் பண்டிகை வரும். மார்கழி இறுதியிலேயே, வீட்டைச் சுத்த‍ம் செய்து சுண்ணாம்பு அடித்து, செம்ம‍ண் பட்டை இட்டு வீட்டில் உள்ள‍ பழைய பொருட்களை எல்லாம் அப்புறப்ப‍டுத்த வேண்டும். அன்று வாசலில், செம்ம‍ண் இட்டு, கோலம் போடுவார்கள். மார்கழி முப்ப‍து நாட்களுமே, வாசலில், பெரிய பெரிய கோலங்கள் இட்டு பரங்கிப் பூ கொண்டு வந்து கோலத்தின் நடுவில் சாணியை உருட்டி வைத்து பூவே அதில் செருகி வைப்பார்கள்.

போகிப் பண்டிகைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்து, வடை தட்டி பாயசம் செய்ய‍ வேண்டும். போளி செய்ய‍ வேண்டும். அன்று கரும்பு, மஞ்சள், வாழைப்ப‍ழம், தேங்காய், வெற்றிலை பாக்கு, எல்லாம் வாங்கி வருவார்கள். கூடைப் பூ வாங்கி வந்து நல்ல‍ நேரம் பார்த்து, வீட்டு வாசல் பின்பக்க‍ம், வாகனங்கள் எல்லாவற்றிற்கும் காப்பு கட்டுவார்கள்.

2 வெண்கலப் பாத்திரத்தைத் தேய்த்து, சுண்ணாம்பு தடவி, சூரியன் சந்திரன் வரைந்து, மஞ்சள் செடியை கழுத்தில் கட்ட‍ வேண்டும். முதல் நாளே, எல்லாவற்றையும் தயார் செய்து கொள்ள‍ வேண்டும்.

திருவாதிரை


நான்கு நாட்கள் கழித்து திருவாதிரை பண்டிகை வரும். அன்று சிவன் கோயில் காலை 5 மணிக்கு ஆருத்திரா தரிசனம் பார்க்க‍ வேண்டும். அன்று திருவாதிரை களியும், ஏழு காய் கூட்டும், செய்து சுவாமிக்கு பூஜை செய்வார்கள்.

திருவாதிரைக் களி ;
பச்ச‍ரிசி 2 டம்பளர்
பாசிப்பருப்பு அரை டம்பளர்
ஏலக்காய்
முந்திரி
நெய்
தேங்காய்
வெல்ல‍ம் 3 டம்ளர்

அரிசியைக் கழுவி, உடனே வடியவிட்டு, காய்ந்ததும், வாணலியில் போட்டு வறுக்க‍ வேண்டும். பொன் கலராக வரும்போது, அடுப்பை அணைத்து விடவும். பாசிப்பருப்பையும், சுட வைத்துக் கொள்ள‍வும். ஆறியபின், இரண்டையும், ஒன்றாக மிக்ஸியில் போட்டு வெள்ளை ரவை போல பொடித்துக் கொள்ள‍வும். ஒரு கெட்டியான பாத்திரத்தில்,  6 டம்பளர் தண்ணீர் விட்டு, நன்கு காய்ந்ததும், தேங்காயைத் துருவி அதில் போடவும். ஏலக்காய் பொடி செய்து போடவும். ரவையைக் கொட்டி, உப்புமாவைப் போல் வேக விடவும்.

வேறு ஒரு பாத்திரத்தில், வெல்ல‍த்தைக் கரைத்து, கல் மண் போக வடிகட்டி, மறுபடியும் அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும், இறக்கி, வெந்து கொண்டிருக்கும் அரிசி குறுணையில் கொட்ட‍வும். அரை கப் நெய்யைக் காய்ச்சி அதில் விடவும். முந்திரிப் பருப்பு பொன்னிறமாக வறுத்து அதில் போட்டு கலக்க‍வும்.

இதற்கு தொட்டுக் கொள்ள‍, ஏழு காய்கள், ஏழு கொடிக் காய்கள், கிழங்கு வகைகள் பருப்புகள் போட்ட‍ புளிக்கூட்டு செய்து சாப்பிட வேண்டும்.

வைகுண்ட ஏகாதசி


மார்கழி மாதம் 30 நாட்களும், விடியற்காலை ஐந்து மணிக்காவது எழுந்து சீக்கிரம் குளித்து விட்டு, சிவன் கோயில், பெருமாள் கோயில்களுக்குச் சென்று வரலாம். இந்த மாதம் வைகுண்ட ஏகாதசி வரும். அன்று விரதம் இருந்து பெருமாள் கோயிலுக்குச் சென்று பெருமாளைத் தரிசனம் செய்து விட்டு சொர்க்க‍ வாசல் மிதித்து விட்டு வரலாம். அன்று ஒருவேளை மட்டும் பலகாரம் செய்ய‍லாம். வயதானவர்கள் உப்பில்லாமல் ஒரு வேளை மட்டும் சாப்பிடுவார்கள். அடுத்த‍ நாள் துவாதசி அன்று சீக்கிரமே குளித்து விட்டு ஏழு மணிக்குள் சமைத்து விட்டு சீக்கிரமே சாப்பாடும் சாப்பிட்டு விரதத்தை முடிப்பார்கள். அன்று அகத்திக் கீரை பொரியல், நெல்லிக்காய், தயிர்ப்ப‍ச்ச‍டி, எல்லாக் காய்களும் போட்டு புளிக்கூட்டு (குழம்பு), பாயசம் கொஞ்சம் செய்வார்கள்.

Tuesday, October 23, 2012

தீபாவளிப் பண்டிகை


தீபாவளிக்கு எல்லா பட்சணங்களும் செய்ய‍லாம். சோமாசி, மிக்சர், முள்ளு முறுக்கு, ஓட்டு பக்கோடா, மைசூர்பாக்கு செய்யலாம். பண்டிகைக்கு முதல் நாள் சுவாமி அறையைச் சுத்த‍ம் செய்து கோலமிட்டு, புதுத் துணிகளுக்கு மஞ்சள் துடைத்து எண்ணெய், சீயக்காய், மஞ்சள், குங்குமம், பட்சண வகைகளை வைக்க‍ வேண்டும்.  நல்லெண்ணையில், பூண்டு, இஞ்சி, ஒரு மிளகாய் போட்டு காய்ச்சி ஆற விட்டு தேய்த்துக் கொள்ள‍லாம். தண்ணீர் காயவைக்கும் அண்டாவைத் தேய்த்து மாவிலை கட்டி அடுப்பிற்கு கோலம் போட்டு அண்டாவில் சந்திர சூரியன் படம் வரைய வேண்டும்.

விடியற்காலை எழுந்து எண்ணைய் தேய்த்துக் குளித்து விட்டு புதுத் துணிகள் அணிந்து சுவாமி நமஸ்காரம் செய்து, பெரியவர்களுக்கு நமஸ்காரம் செய்ய‍ வேண்டும். எல்லாருக்கும் தீபாவளி வாழ்த்துக்க‍ள் சொல்ல‍ வேண்டும். கொஞ்ச நேரம் பட்டாசு வெடித்து விட்டு எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து பட்சண வகைகள் சாப்பிட்டுவிட்டு, சந்தோசமாக தீபாவளியைக் கொண்டாடலாம். கோயிலுக்குச் சென்று விட்டு வரலாம்.

விஜயதசமி


விஜயதசமி அன்று காலையில் விளக்கேற்றி மறு பூஜை செய்து பூஜையில் வைத்த‍ புத்த‍கம் அல்ல‍து வாத்தியம் வாசிக்க‍ வேண்டும்.

அன்று இரவு பால் நைவேத்தியம் செய்து ஆரத்தி எடுத்து சுவாமியைப் படுக்க‍ வைக்க‍ வேண்டும். அதாவது ராமர் சீதை பொம்மைக்கு நலங்கு வைத்து பத்தியம் பாடி பக்க‍த்தில் ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் வைத்து கற்பூரம் காட்டிப் படுக்க வைக்க‍ வேண்டும்.

அடுத்த‍ நாள் காலை கற்பூரம் காட்டிவிட்டு சுவாமியை பள்ளி எழுச்சி பாடி நிமிர்த்தி வைக்க‍ வேண்டும். பிறகு நமஸ்காரம் செய்து விட்டு நம்முடைய சௌகரியம் போல் பொம்மைகளைத் துடைத்து துணி சுற்றிப் பெட்டியில் பூச்சி உருண்டை நிறைய போட்டு பத்திரமாக உடையாமல் எடுத்து வைக்க‍ வேண்டும்.

சுகியன் அல்ல‍து சுய்ய‍ம்

தேங்காய் பூரணம் செய்து கொண்டு ஒரு டம்ளர் பச்ச‍ரிசி, அரை டம்ளர் உளுந்து ஊற வைத்து மிக்ஸியில் நன்றாக அரைத்து சிறிது உப்பு போட வேண்டும். பூரணத்தைச் சின்ன‍ச் சின்ன‍ உருண்டையாக செய்து மாவில் தோய்த்து எண்ணையில் உருட்டிப் போட வேண்டும். புசு புசு வென்று உப்பிக் கொண்டு வரும். சிவந்ததும் எடுத்து விடவும்.

சரஸ்வதி பூஜை


ந‌வராத்திரி ஒன்பதாம் நாள் சரஸ்வதி பூஜை அன்று, வீடு வாசல் சுத்த‍ம் செய்து, கோலம் போட்டு, நாம் படித்த புத்த‍கங்கள், பேனா, பென்சில், சுலோக புத்த‍கங்கள், வாத்தியங்கள், அளக்கும் படி, கத்தரிக்கோல் போன்றவற்றை, ஒரு பெட்டியின் மீது அடுக்கி, அதன்மேல் லட்சுமி, சரஸ்வதி, பொம்மையை தனியாக எடுத்து வைத்து ரவிக்கை துணி சார்த்தி, பஞ்சு வஸ்திரம் போட்டு இனிப்பு அப்ப‍ம் வார்த்து பூஜை செய்ய‍ வேண்டும்.

மசால் வடையும், சுகியனும் செய்ய‍ வேண்டும். சரஸ்வதி மேல் சுலோகங்கள் சொல்லி பாட்டு பாடி, தேங்காய், பழம் வெற்றிலை பாக்கு வைத்து பூஜை செய்து ஆரத்தி எடுத்து முடிக்க‍ வேண்டும்.

நவராத்திரி


புரட்டாசி மாதம் அம்பாளுக்கு நவராத்திரி பண்டிகை வரும். அமாவாசையிலிருந்து 10 நாளும், மிகவும் விசேஷமாக பூஜைகள் நடக்கும். அமாவாசையன்று கொலுப் படிகள் கட்டி எல்லா பொம்மைகளும் வைப்பார்கள். 3, 5, 7, 9, 11 என்று படி கட்டுவார்கள். அதில் லட்சுமி, சரஸ்வதி, பார்வதி பொம்மைகள் கண்டிப்பாக இருக்கும். விநாயகர், தசாவதாரம், அஷ்டலட்சுமி, முருகன், பார்வதி, பரமசிவன் என்று எல்லா தெய்வங்களின் பொம்மைகளை வைத்துப் படி வைப்பார்கள்.

கடைசி படியில் குளம் கட்டி கோயில் பொம்மை, குழந்தைகளுக்குப் பிடித்த‍மான பார்க், விளையாட்டு பொம்மைகளை வைத்து அலங்காரம் செய்வார்கள். முதல் நாளன்று ஒரு கலசத்தில் அரிசி, பருப்பு, வெல்ல‍ம், ஒரு ரூபாய் போட்டு மாவிலை வைத்து தேங்காய், மாதுளம் பிஞ்சு வைத்து நல்ல‍ நேரம் பார்த்து கலசம் வைப்பார்கள். கலசத்தில் அம்பாளை ஆவாஹனம் செய்து பூஜை பண்ண‍ வேண்டும். இரண்டு வேளையும் கொலு அருகில் விளக்கேற்றி ஆரத்தி எடுக்க‍ வேண்டும்.

மாலையில் தினம் சுண்டல் செய்து நைவேத்தியம் செய்து எல்லாரையும் கூப்பிட்டுக் கொடுக்க‍லாம். தினமும் காலையில் அம்பாளுக்குப் பிடித்த‍ கலந்த சாதங்கள், பாயசம் ஏதாவது ஒன்று செய்ய‍ வேண்டும். லலிதா சகஸ்ர நாமம் படிக்க‍லாம். தேவி மகாத்மியம் கதையைப் படித்தால் மிகவும் நல்ல‍து. அம்பாளைப் பற்றிய பாடல்களை ஸ்லோகங்களைச் சொல்ல‍ வேண்டும். அஷ்டலட்சுமி ஸ்லோகம், மகிஷாசுர மர்த்தினி, கனகதாரா ஸ்தோத்ரம், சௌந்தர்ய லஹரி போன்ற அம்பாளின் ஸ்லோகங்களைப் பாராயணம் பண்ணலாம்.

ந‌வராத்திரியில் ஒரு நாள் 2 சுமங்கலிகளுக்கு சாப்பாடு போட்டு வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், கண்ணாடி, சீப்பு, வளையல் வைத்து மருதாணி ரவிக்கைத் துணி வைத்துக் கொடுக்க‍ வேண்டும். கல்யாணம் ஆகாத ஒரு கன்னிப் பெண்ணுக்கு (10 வயதுக்குள்) பாவாடை அல்ல‍து கவுன் வாங்கிக் கொடுக்க‍ வேண்டும்.

அன்று சமையலில் பாயசம் அல்ல‍து சர்க்க‍ரைப் பொங்கல், பருப்பு, தயிர்பச்ச‍டி, கறி, கூட்டு, சாம்பார், ரசம், வடை செய்ய‍ வேண்டும். அவர்கள் சாப்பிட்ட‍ பின் தான் நாம் சாப்பிட வேண்டும். தினம் ஒரு சுண்டல் செய்ய‍ வேண்டும். ஒரு நாளைக்குப் புட்டு செய்ய‍லாம். ஒரு நாள் பொட்டுக்க‍டலை உருண்டை, மைதாமாவு பிஸ்கட், கூட செய்யலாம்.

Friday, September 7, 2012

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்திக்கு முதல் நாளே பச்சரிசி இட்லி, கொழுக்க‍ட்டைக்கு, மாவு, பூரணம், எள் சிகிலி உருண்டை எல்லாம் தயார் செய்து வைக்க‍வும். பிள்ளையார் சதுர்த்தியன்று வாசலில் செம்ம‍ண் இட்டு மணைக் கோலம் போட வேண்டும். பூஜையறையில் பலகையில் கோலம் போட வேண்டும். பூஜையறையில், பலகையில் கோலம் போட்டு புது மண் பிள்ளையார் வாங்கி வந்து வைத்து அலங்காரம் செய்து எருக்க‍மாலை, மாவிலை, தும்பை, அரளி, அருகம்புல், மல்லிகை, ரோஜா, தாமரை எல்லா மலர்களும் கொண்டு பூஜை செய்ய‍ வேண்டும். எல்லா பழ தினசுகளும் வைக்க‍லாம். சோளக்கதிர் விளாம்பழம் பிள்ளையாருக்குப் பிடிக்கும். காலையில் மாவைக் கிளறி, கொழுக்க‍ட்டை மோதகம், உருண்டைப் பாயசம், வடை, சுண்டல், சாதம் பருப்பு, பச்ச‍ரிசி இட்லி, எல்லாம் மடியாகச் செய்ய‍ வேண்டும். தேங்காய் உடைத்து, வெற்றிலை பாக்கு நைவேத்யம் செய்ய‍ வேண்டும். பிறகு ஆரத்தி எடுத்து விநாயகர் ஸ்லோகங்களைச் சொல்லி, பாட்டுக்கள் பாடி முடிக்க‍ வேண்டும். சாயந்திரம் சுண்டல் செய்து எல்லாரையும் கூப்பிட்டு மஞ்சள் குங்குமம், கொடுத்து, சுண்டல் விநியோகம் செய்ய‍லாம்.

அடுத்த‍ நாள் மத்தியானம் பிள்ளையாருக்கு தயிர் சாதம் செய்து, ஒரு துணியில் கட்டி தோள்பட்டையில் தொங்க விட்டு நகையெல்லாம் கழற்றி விட்டு மண்பிள்ளையாரை ஆற்றிலோ, குளத்திலோ கரைத்து விட வேண்டும்.

Tuesday, July 31, 2012

அவல்

தயிர் அவல்

வெறும் அவலில் ஒரு வெல்ல‍க் கட்டி. தயிரில் கொஞ்சம் அவல் போட்டு தயிர் அவல் செய்ய‍லாம்.


புளி அவல் , வெல்ல‍ அவல்

 காலையிலேயே அவலை, புளித் தண்ணீரிலும், வெல்ல‍ அவலுக்கு வெல்ல‍த் தண்ணீரிலும், நனைத்து ஊற வைக்க‍ வேண்டும். அப்போது தான் நன்றாக ஊறி, மாலையில் தாளிக்கும்போது, உதிரி உதிரியாக வந்து நன்றாக வரும்.

பால் பாயசம்


ஒரு பாத்திரத்தில், தண்ணீரைக் கொதிக்க வைத்து பாசிபருப்பை போட்டு நன்கு குழைய வெந்ததும், வெல்ல‍ம் சிறிது போட்டு கொதித்த‍தும், ஏலக்காய் பொடி போட்டு இறக்க‍வும். ஆறியபின் பால் விடவும்.

கோகுலாஷ்டமி

ஆவணி அவிட்ட‍ம் முடிந்த எட்டாம் நாள் கோகுலாஷ்டமி வரும். முதல்நாளே, பட்சணத்துக்குத் தேவையான மாவைத் தயார் செய்து வைத்துக் கொண்டு விடவும். அன்று மாலை கிருஷ்ணருக்குப் பிடித்த‍மான அவல் (புளி அவல், வெல்ல‍ அவல்) முக்கியம்.

பட்சணங்களாக முள்ளு முறுக்கு, தேன்குழல், உப்புச் சீடை, வெல்ல‍ச் சீடை, கை முறுக்கு, அப்ப‍ம், பயத்த‍ம்பருப்பு பாயசம், சிகிலி உருண்டை, சூப்பான், கோடுவளை, சுண்டல் எல்லாம் செய்ய‍ வேண்டும். அன்று காலையில் ஒருவேளை மட்டுமே சாப்பிட்டுவிட்டு மாலையில் பூஜை முடிந்து தான் சாப்பிட வேண்டும்.

 பால் பாயசம்,  அவல் https://youtu.be/DRSZcDOblIk

வீடெல்லாம் துடைத்து, வாசலிலிருந்து மாக்கோலம் போட வேண்டும். கிருஷ்ணர் பாதங்கள் வாசலிலிருந்து பூஜை ரூம் வரை போட வேண்டும். கிருஷ்ணர் பொம்மையை வைத்து அலங்காரம் செய்ய‍ வேண்டும். வாசனைப் பூக்க‍ள் வாங்கிப் போட வேண்டும். நகையெல்லாம் போட்டு, சந்தன குங்கும்ம் இட்டு, பூஜை புஸ்தகத்தில் உள்ள‍படி கிருஷ்ணர் அஷ்டோத்திரம் படித்து, அர்ச்ச‍ னை செய்து, நைவேத்தியம் எல்லாம் கொண்டு வந்து வைத்து, தேங்காய்ப் பழம் உடைத்து, வெற்றிலை பாக்கு, பால், தயிர், புளி அவல், வெல்ல‍ அவல், பழங்கள் (நாவல் பழம்), எல்லாம் வைத்துப் பூஜையை முடிக்க‍ வேண்டும்.

கிருஷ்ணர் மேல் பாட்டுக்க‍ள் பாடி, ஆரத்தி எடுத்து நமஸ்காரம் செய்ய‍ வேண்டும். பக்க‍த்தில் உள்ள‍வர்களைக் கூப்பிட்டு, வெற்றிலை பாக்கு மஞ்சள், குங்குமம் கொடுக்க‍வும்.முடிந்தால், சீடை, முறுக்கு எல்லாம், முதல்நாளே எச்சில் பண்ணாமல் செய்து வைக்க‍லாம். கோகுலாஷ்டமி அன்று அவல், பாயசம், சுண்டல் மட்டும் செய்ய‍லாம்.

Wednesday, April 4, 2012

மசால் வடை

பட்டாணி பருப்பு - 200
அல்லது
கடலைப்பருப்பு - 1 டம்ளர்
துவரம் பருப்பு - 1/2 டம்ளர்
உளுந்து - 1 ஸ்பூன்
பாசிபருப்பு - 1/4 டம்ளர்
(ஊற வைக்க‍வும்)

க‌டலைபருப்பும் துவரம்பருப்பையும் ஒன்றாக ஊற வைக்க‍வும். 1 மணி நேரம் ஊறினால் போதும். நன்றாக அலம்பி கல் இல்லாமல் வடிய விடவும். 2 ப•மிளகாய், 2 வரமிளகாய், இஞ்சி 1 துண்டு, பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை போட்டு, இரண்டு பருப்பையும், லேசாக தண்ணீர் தெளித்து அரைக்க‍வும். கொரகொரவென்று கெட்டியாக அரைக்க‍வும். சுவாமிக்கு வெங்காயம் போடாமல், நான்கு தட்டி நெய்வேத்யம் செய்துவிட்டு, மீதி மாவுக்கு சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி பிசைந்து மாவுடன் பிசைந்து உருட்டி வடையாக தட்டி எண்ணையில் போட்டு பொரித்து எடுக்க‍வும்.

எல்லா பண்டிகைக்கும் இந்த வடை செய்ய‍லாம். மாலை நேர டிபனுக்கும் கொஞ்சமாக செய்து கொடுக்க‍லாம்.

Friday, March 23, 2012

உப்பிட்டு

உப்பிட்டு - போளி

தேவையானவை
மைதா - 1 4 கிலோ,
ரவை - கைப்பிடி
வெல்ல‍ம் - 1 2 கிலோ
க‌டலைப்பருப்பு - 100 கிராம்
து.பருப்பு - 50 கிராம்
முற்றிய தேங்காய் - 1 துருவிக் கொள்ள‍வும்
ஏலக்காய் - 1 ஸ்பூன் பொடி

காலையிலேயே ரவையைக் கொஞ்சம் தண்ணீரில் ஊற வைத்து, அரை மணி கழித்து மைதாமாவைச்சலித்து, ரவையை அதனுடன் சேர்த்து சிறிது உப்பு, தண்ணீர் விட்டு, புரோட்டா மாவு போல் இளக்க‍மாக பிசைந்து வைக்க‍வும். கொஞ்சம் கொஞ்சமாக எண்ணை விட்டு பிசையவும். இரண்டு மணி நேரம் ஊற வேண்டும்.

க‌டலைப்பருப்பையும் து. பருப்பையும் வேக விடவும். குழைய விடாமல், நசுக்கினால், மசியும் பதத்தில் இருக்க‍ வேண்டும். பிறகு, வடிய விட்டு, தேங்காயை வாணலியில் போட்டு, வதக்கிய பின்னர் வெல்ல‍ம் பொடி செய்து போட்டு, ஏலக்காய் பொடி போட்டு, பூரணமாக வதக்க‍வும். ஆறியபின் பூரணம், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, எல்லாவற்றையும் மிக்ஸியிலோ, அல்ல‍து ஆட்டுரலிலோ நைசாக அரைத்து இளக்கமாக இருக்கும். வாணலியில் போட்டு வதக்கி சிறிது கெட்டியாகும் வரை சிறிது நெய் விட்டு வதக்கி எடுத்து, ஆறியபின் ஒரு எலுமிச்ச‍ம்பழ அளவுக்கு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள‍ வேண்டும்.

பிறகு, ஒரு பிளாஸ்டிக் கெட்டி கவர், அல்லது வாழை இலையில், மைதா மாவை அப்ப‍ளம் போல எண்ணெய் தொட்டு, வட்ட‍மாக பரப்பி, அதன் நடுவில் தேங்காய் பூரண உருண்டையை வைத்து மூடி அப்ப‍ளக் குழவி அல்ல‍து, கையால், மெலிதாக தட்ட‍ வேண்டும்.

தோசைக்க‍ல்லில் போட்டு பேப்ப‍ ரை உடனே எடுத்து விடவும். இரண்டு பக்க‍மும் வெந்து சிவந்ததும் (நெய் எண்ணை கலந்து) ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு சப்பாத்தி போல் போட்டு எடுக்க‍ வேண்டும். பிறகு மடித்து, ஒரு பேசினில் போடவும். இப்ப‍டியே, எல்லா மைதா மாவையும், பூரி போல் இட்டு, பூரணம் வைத்து, போளி தட்டிக் கொள்ள‍வும். பரிமாறும்போது, 1 ஸ்பூன் நெய் விட்டு சாப்பிட்டால், மிகவும் ருசியாக இருக்கும்.

இந்தப் போளியை, போகிப்பண்டிகை, ஆடிப்பண்டிகை, ஆவணி அவிட்ட‍ம் போன்ற பண்டிகை நாட்களிலும், சுமங்கலிப்பிரார்த்த‍னைக்கும் செய்வார்கள்

ஆவணி அவிட்ட‍ம்

வ‌ரலட்சுமி பண்டிகை முடிந்து 4 நாட்களிலே ஆவணி அவிட்ட‍ம் பண்டிகை வந்துவிடும். வீட்டில் உள்ள‍ புருஷர்கள் புதுப் பூணூல், மாற்றிக் கொள்வார்கள். அன்று வாசலுக்குச் செம்மண் இட்டு கோலம் போட வேண்டும். காலையில் இட்லி, அப்ப‍ம் வார்க்க‍ வேண்டும். அவர்கள் பூணூல் போட்ட‍ பிறகு ஆரத்தி எடுக்க‍ வேண்டும். வீட்டில் போட்டுக் கொள்வதாய் இருந்தால் மஞ்சள் பிள்ளையார் பிடித்து பூஜை செய்த பிறகு, பூணூல் போட்டுக் கொள்வார்கள். பூஜைக்கு உதிரிப்பூ கொஞ்சம், வெற்றிலைப் பாக்கு, பழம் போதும். மத்தியானம், வடை, பாயசம், ஒரு கறி, ஒரு கூட்டு, உப்பிட்டு, சாம்பார், ரசம் என்று பலவகைகள் செய்ய‍ வேண்டும். obottu can be made one day earlier too.

அடுத்த‍ நாள் காயத்ரி ஜெபத்த‍ன்று கலந்த சாதம் தான் செய்வார்கள். தேங்காய்ச்சாதம், தக்காளி புளியஞ்சாதம், எலுமிச்ச‍ பழ சாதம், தயிர் சாதம், அவியல், தொட்டுக் கொள்ள‍ செய்ய‍லாம். அன்று குழம்பு , ரசம் வைக்க‍ மாட்டார்கள். பிஸிபேளாபாத் கூட செய்ய‍லாம்.

Sunday, March 11, 2012

கருவடாம்

ஜவ்வ‍ரிசியை வறுத்து, பொடி செய்து கொள்ள‍வும். ஒரு அரிசி மாவுக்கு, 4 ஜவ்வ‍ரிசி என்ற கணக்கில் அவற்றைக் கலந்து கொள்ள‍வும். இந்த மாவுக் கலவைக்குத் தக்க‍ தண்ணீரைக் கொதிக்க‍விட்டுக் கொள்ள‍வும்.

பச்சைமிளகாயை அரைத்து வைத்துக் கொள்ள‍வும்.

கொதிக்கும் தண்ணீரில் ஒரு ஸ்பூன் மாவைக் கலந்து விடவும். மெல்ல‍ மற்ற‍ மாவையும், பச்சைமிளகாய் விழுதையும் போட்டுக் கலக்க‍வும். அடுப்பை அணைத்துவிட்டு, குக்கரை மூடிவிடவும்.

வடாம் மாவு ரெடி.

வெங்காய வடாத்துக்கு, இத்துடன், சின்ன‍ வெங்காயத்தை வேக வைத்துக் கலக்க‍வும்.

Thursday, March 8, 2012

கொழுக்க‍ட்டை

நான்கு நாட்களுக்கு முன்னாலேயே பச்ச‍ரிசியை நனைத்து உலர்த்தி, இடித்து மாவாக்கி வைத்துக் கொள்ள‍ வேண்டும். ஒரு கிண்ண‍த்தில், 1.5 டம்பளர் தண்ணீர் எடுத்துக் கொதிக்க‍விடவும். கொதிக்கும்போது, அரை டம்பளரை எடுத்துவிடவும். 2 spoon அரிசிமாவைக் கரைத்து, கால் ஸ்பூன் உப்பு போட்டு, கொதிக்க‍ வைக்க‍வும். ஒரு ஸ்பூன் எண்ணெய் விடவும். கொதிக்கும் தண்ணீரைக் கீழே இறக்கி, பச்ச‍ரிசி மாவை அதில் கொட்டி, கட்டி இல்லாமல் கிளறவும். பிறகு, சிறிது நேரம், அடுப்பில் வைத்து, தட்டு போட்டு மூடி அடுப்பைச் சிம்மில் வைக்க‍வும். மாவு வெந்திருக்கும்.

பிறகு, தட்டில் ஈரத்துணியைப் போட்டு மாவை எடுத்துப் போட்டு, துணிபோட்டு மூடி நன்கு அழுத்தி பிசையவும். மாவு ரப்ப‍ர் பந்து போல் ஒட்டாமல் நன்கு பிசைய வரும். பிறகு ஒரு கிண்ண‍த்தில் எண்ணெயை வைத்துக் கொண்டு சின்ன‍ச் சின்ன‍ உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொண்டு கிண்ண‍ங்கள் செய்ய‍ வேண்டும்.

பிறகு பூரணத்தை அதில் வைத்து, கிண்ண‍த்தின் மேல்பக்க‍ம் தண்ணீர் தொட்டு அமுத்தி ஒட்ட‍ வேண்டும். அல்ல‍து, மோதகமாக குவித்துச் செய்ய‍லாம். எல்லா மாவையும் இதே போல கொழுக்க‍ட்டையாக செய்ய‍ வேண்டும்.

கொழுக்க‍ட்டை மாவையே சின்ன‍ச் சின்ன உருண்டைகளாக உருட்டிக் கொண்டு, ஒரு கிண்ண‍த்திலை ஒரு டம்பளர் தண்ணீரை கொதிக்க‍ வைக்க‍ வேண்டும். அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு, இந்த உருண்டைக ளைப் போட வேண்டும். உருண்டை வெந்து மேலே மிதக்கும். அப்போது, வெல்லம் கொஞ்சம் போடவும். கெட்டியாக ஆகும். கீழே இறக்கி, ஏலப்பொடி தூவி, பால் ஊற்றி இறக்கி விடவும். இது பால் கொழுக்க‍ட்டை.

உப்பு கொழுக்க‍ட்டை பூரணத்தை, வடை தட்ட‍ வேண்டும்.

Monday, March 5, 2012

மாங்காய் பச்ச‍டி

மாங்காய் அல்ல‍து மாம்பழம் - 1
வேப்ப‍ம்பூ சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
புளி சிறிதளவு.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உ.பருப்பு தாளித்து, வேப்ப‍ம் பூ, பச்சை மிளகாய், மாங்காய் ஒன்றையும் வதக்க‍ வேண்டும். நீர்ப்புளியாக கரைத்து அதில் விடவும். உப்பு, மஞ்சள் பொடி போட்டு, கொதிக்கும் போது, மாங்காய் வெந்திருக்கும். சிறிதளவு வெல்ல‍த்தைப் பொடி செய்து அதில் போடவும். பெருங்காயம் கொஞ்சம் போடவும்.கொதித்து கெட்டியானதும், இறக்கவும். இதில் புளிப்பு, இனிப்பு, கசப்பு மூன்று சுவைகளும் கலந்திருக்கும்.